வயநாடு செல்லும் வழியில் முதுமலைக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வருகை-வன அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வயநாடுக்கு செல்லும் வழியில் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு வந்து வன அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

Update: 2023-03-10 18:45 GMT

கூடலூர்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வயநாடுக்கு செல்லும் வழியில் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு வந்து வன அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

முதுமலைக்கு வந்த கவர்னர்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தங்கி இருந்த தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நேற்று காலை முதுமலை, கூடலூர் வழியாக கேரள மாநிலம் வயநாட்டுக்கு சென்றார். அப்போது செல்லும் வழியில் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு சென்றார். அப்போது புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் தலைமையிலான வனத்துறையினர் வரவேற்றனர். அவர்களிடம் கவர்னர் ஆர்.என். ரவி கலந்துரையாடினார். தொடர்ந்து கவர்னரிடம் முதுமலை புலிகள் காப்பகம் குறித்த தகவல்களை தெரிவித்து வன அதிகாரிகள் விளக்கினர். மேலும் தெப்பக்காடு முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் 28 யானைகள் பற்றியும், அன்றாடம் வளர்ப்பு யானைகளுக்கு வழங்கப்படும் பணிகள் குறித்தும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்

இதைத்தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள புலிகளின் எண்ணிக்கை குறித்து கவர்னர் ஆர்.என்.ரவி. கேட்டார். அப்போது முதுமலையில் 120 புலிகள் உள்ளதாக தெரிவித்தனர். சுமார் அரை மணி நேரம் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் அதிகாரிகளிடம் கலந்துரையாடினார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் வைத்திரி, மேப்பாடி சென்றார். அங்கு தன்னுடன் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி குடும்பத்தினரை சந்தித்தார். தொடர்ந்து மாலையில் புறப்பட்டு இரவு 8 மணிக்கு முதுமலை வழியாக ஊட்டிக்கு சென்றார். தமிழக கவர்னர் ஊட்டியில் இருந்து வயநாடு மாவட்டம் சென்று திரும்பியதால் முக்கிய இடங்களில் கேரளா, நீலகிரி போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்