போதை தரும் மருந்துகளை டாக்டர் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்றால் உரிமம் ரத்து - தமிழக அரசு எச்சரிக்கை
போதை தரும் மருந்துகளை டாக்டர் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று மருந்து கடைகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் போதை தரும் மருந்துகளை தவறான பயன்பாட்டிற்காகவும் டாக்டரின் உரிய பரிந்துரைச்சீட்டு இல்லாமலும் மற்றும் விற்பனை ரசீதுகள் இல்லாமலும் விற்பனை செய்வது மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் சட்டம் 1940 மற்றும் மருந்துகள் விதிகள் 1945-ன் படி விதிமீறலாகும். அவ்வாறு விதிமீறல்கள் கண்டறியப்படும் மருந்துக்கடைகளின் உரிமங்கள் உடனடியாக ரத்துசெய்யப்படும்.
மேலும், அடிமைப்பழக்கத்தை ஏற்படுத்தும் போதை தரும் மருந்துகளை தவறான பயன்பாட்டிற்காக மருந்து உரிமம் இல்லாத நபர்களுக்கு விற்பனை அல்லது வினியோகம் செய்யும் மொத்த மருந்து விற்பனையாளர்களின் மருந்து உரிமங்களும் ரத்துசெய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.