நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சுப்ரீம்கோர்ட்டில் தமிழ்நாடு அரசு புதிய மனு

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சுப்ரீம்கோர்ட்டில் தமிழ்நாடு அரசு புதிய மனுவினை தாக்கல் செய்துள்ளது.

Update: 2023-02-18 18:11 GMT

சென்னை,

மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வந்தது. இதனால் நீட் தேர்வுக்கு தடை கோரி நீண்ட நாட்களாக பல போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இதனைத்தொடர்ந்து நீட் தேர்வில் இருந்து விலக்குக்கோரி 2021-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபையில் ஒருமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை தமிழ்நாடு கவர்னர் ரவி, நீண்ட காலமாக கிடப்பில் வைத்திருந்து பின்னர் மீண்டும் தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார்.

இதனையடுத்து 2-வது முறையாக தமிழ்நாடு சட்டசபையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா நிறைவேற்றப்பட்டு மீண்டும் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவை ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பி வைத்திருப்பதாகவும் கவர்னர் தெரிவித்தார். நீட் தேர்வு விலக்கு குறித்து, ஏற்கனவே விளக்கம் கேட்டு மத்திய அரசு அனுப்பிய கடிதத்துக்கு தமிழ்நாடு அரசு விளக்கம் தந்த நிலையில், மீண்டும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது. அதற்கான விளக்கத்தையும் சட்ட வல்லுநர்களின் துணையுடன் தமிழக அரசு அனுப்பிவைத்தது.

இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு புதியதாக மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், நீட் தேர்வு நடத்துவது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது, நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும். மேலும் கூட்டாட்சி கொள்கையை இது மீறுவதாக உள்ளது. நீட் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மாநில அரசை கட்டுப்படுத்தாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்