தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - டி.டி.வி.தினகரன்

தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

Update: 2024-09-08 05:55 GMT

கோப்புப்படம்

சென்னை,

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 12 மீனவர்களை கைது செய்திருக்கும் இலங்கை கடற்படை, மீனவர்கள் சென்ற மூன்று விசைப்படகுகளையும் பறிமுதல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு இதே புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்பது மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்கதையாகி வரும் இலங்கை கடற்படையினரின் அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்காமல், ஒவ்வொரு கைதின் போதும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதையே வாடிக்கையாக கொண்டிருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் செயல்பாடு எந்த வகையிலும் பயனளிக்காது.

எனவே, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளை உடனடியாக விடுவிக்கத் தேவையான முயற்சிகளை மேற்கொள்வதோடு, இனிவரும் காலங்களில் தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்