தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் திறமையான இளம் வீராங்கனைகளை தேர்வு செய்யும் திட்டம்

வருங்காலத்தில் பெண்களுக்கு டி.என்.பி.எல். போன்று 20 ஓவர் லீக் மற்றும் ஒருநாள் போட்டி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.;

Update: 2023-05-09 20:31 GMT

கோப்புப்படம் 

சென்னை,

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் பெண்கள் கிரிக்கெட்டை மேலும் மேம்படுத்த திறமையான இளம் வீராங்கனைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிக்கு தயார்படுத்த புதிய திட்டம் தீட்டப்பட்டுள்ளது. திறமையான வீராங்கனைகளை கண்டறிய முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர்களை உள்ளடக்கிய 4 குழு உருவாக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குழுவிலும் பெண்கள் உள்பட 4 பேர் அங்கம் வகிப்பார்கள். இந்த குழுவினர் வருகிற 13-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 37 மாவட்டங்களுக்கு நேரில் சென்று திறமையான வீராங்கனைகளை தேர்வு செய்கிறார்கள். வருகிற 13 மற்றும் 14-ந் தேதிகளில் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, மதுரை, தேனி, கரூர், திண்டுக்கல், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களிலும், 17-ந் தேதி வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும், 20, 21-ந் தேதிகளில் கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும் வீராங்கனைகள் தேர்வு முகாம் நடைபெறுகிறது. 13 வயதுக்கு மேற்பட்ட வீராங்கனைகள் இந்த தேர்வில் கலந்து கொள்ளலாம்.

இந்த முகாம் முடிவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 22 வீராங்கனைகள் கொண்ட பெண்கள் அணி தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சிறந்த பயிற்சியாளர் தலைமையில் பயிற்சி அளிக்கப்படும். 9 மாதத்துக்கு பிறகு மாவட்ட அணிகள் இடையிலான போட்டி நடத்தப்படும்.

மேலும் வருங்காலத்தில் பெண்களுக்கு டி.என்.பி.எல். போன்று 20 ஓவர் லீக் மற்றும் ஒருநாள் போட்டி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இளம் வீராங்கனைகள் அடையாளம் காணும் திட்டம் குறித்து சென்னையில் நடந்த அறிவிப்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி, துணைத்தலைவர் ஆடம் சேட், பொருளாளர் ஸ்ரீனிவாஸ் ராஜ், உதவி செயலாளர் டாக்டர் ஆர்.என்.பாபா, பெண்கள் தேர்வு கமிட்டி சேர்மன் சுகுணா, கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி சேர்மன் சுதாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்