தமிழ்மொழி, இனம் குறித்த வரலாற்றை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்ல வேண்டும்

தமிழ்மொழி மற்றும் இனம் குறித்த வரலாற்றை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்ல வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் கார்மேகம் அறிவுரை கூறினார்.

Update: 2023-03-17 20:00 GMT

தமிழ்மொழி மற்றும் இனம் குறித்த வரலாற்றை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்ல வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் கார்மேகம் அறிவுரை கூறினார்.

தமிழ் கனவு நிகழ்ச்சி

சேலம் மாவட்டத்தில் மாபெரும் தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி 2-ம் கட்டமாக தலைவாசல் தேவியாக்குறிச்சி பாரதியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பேசியதாவது:-

தமிழ்மொழி என்பது தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும், இந்தியர்களுக்கும் ஒரு அருங்காட்சியகத்தில் வைத்திருக்க வேண்டியது கிடையாது. உலக முழுவதும் உள்ள மனித குலத்தை சேர்ந்த அனைவரும் இதனை கூர்ந்து பார்த்து பாதுகாக்க வேண்டிய மொழியாக தமிழ் மொழி உள்ளது. தொல்காப்பியம் என்ற இலக்கண நூலில் இருந்து நமது வரலாற்றை தொடங்கினால் கூட சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியமிக்க வரலாறு உள்ள மொழியாக தமிழ்மொழி உள்ளது.

அடுத்த தலைமுறையினர்....

கல்லூரி மாணவ, மாணவிகள் தமிழ்மொழி மற்றும் இனம் குறித்த வரலாற்றை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்ல வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் நாம் வாசிக்கக்கூடிய புத்தகங்கள் மிக முக்கியமானதாக இருக்கும். சில புத்தகங்கள் நமது வாழ்க்கையையும், சிந்தனையையும் முழுக்க மாற்றக்கூடியதாக இருக்கும். முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லக்கூடிய புத்தகங்களை தேர்ந்தெடுத்து வாசித்து, அவை குறித்து விவாதித்து, சிந்தித்து மாணவ, மாணவிகள் பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ. "சமத்துவம் தமிழென்று சங்கே முழங்கு" என்ற தலைப்பிலும், கவிஞர் அறிவுமதி "கவிதைப் பெண்கள்" என்ற தலைப்பிலும் பேசினர்.

நிகழ்ச்சியில் ஆத்தூர் உதவி கலெக்டர் சரண்யா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) சரவணன், கல்லூரி செயலாளர் ராமசாமி மற்றும் 1,500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்