தமிழ் பண்பலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ் பண்பலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்தார்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ் பண்பலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்தார்.
நினைவஞ்சலி
தேன்கனிக்கோட்டையில் கடந்த 1990-ம் ஆண்டு அக்டோபர் 10-ந் தேதி நடந்த ராமஜோதி ஊர்வலத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 4பேர் பலியாகினர். அவர்கள் நினைவாக தேன்கனிக்கோட்டை கோட்டை வாசலில் உள்ள 4 ரோட்டில் நினைவு சின்னம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு ஒவ்றொரு ஆண்டும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 32-ம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் பொதுமக்கள், விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தள் மற்றும் இந்து இயக்கங்கள் சார்பில் நேற்று நடந்தது. தேன்கனிக்கோட்டை ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து நினைவு சின்னம் வரை இந்து அமைப்புகள் ஊர்வலமாக வந்தனர். பின்னர் அங்கு இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மத்திய இணை மந்திரி முருகன் கலந்து கொண்டார்.
காட்டாட்சி
பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், ராஜராஜ சோழன் இந்துவா? என நடிகர் கமலஹாசன் கேள்வி கேட்கிறார். அவர் ராஜராஜசோழன் பற்றி படித்துள்ளாரா?. வள்ளலார் பிறந்த நாளில் நாங்கள் ஆன்மிகத்திற்கு எதிரானவர்கள் அல்ல என ஸ்டாலின் பேசுகிறார். இரட்டை வேடம் போடுவதை மு.க.ஸ்டாலினிடம் தான் நாம் கற்று கொள்ள வேண்டும். திருமாவளவன் இந்து மதம் இல்லை என்கிறார். நீங்கள் யாரிடத்தில் கூலி வாங்கி கொண்டு வேலை செய்கிறீர்கள் என்பது மக்களுக்கு தெரியும் என்று பேசினார்.
இதைத்தொடர்ந்து இணை மந்திரி எல்.முருகன் நிருபர்களிடம் கூறுகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த பிளவும் கிடையாது. தி.மு.க., கூட்டணியில் வேண்டும் என்றால் பிளவு ஏற்பட்டு இருக்கலாம். அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்களை கட்டுப்படுத்த முடியாமல் மு.க.ஸ்டாலின் தவிக்கிறார். முதல்-அமைச்சர் கூறுவதை அவர்கள் கேட்காமல் இருப்பது தமிழகத்தில் காட்டாட்சி நடக்கிறது என்பதையும், ரப்பர் ஸ்டாம்பு முதல்வராக மு.க.ஸ்டாலின் உள்ளார் என்பதையும் காட்டுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ் பண்பலை வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக இருந்தால் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் விஸ்வ ஹிந்து பரிஷத் தென் பாரத அமைப்பு செயலாளர் கேசவராஜூ, முன்னாள் எம்.பி. நரசிம்மன், பா.ஜ.க. மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் மற்றும் கட்சி நிர்வாகிக், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.