தாசில்தார் வாகனத்தை நரிக்குறவர் இன மக்கள் முற்றுகை

தாசில்தார் வாகனத்தை நரிக்குறவர் இன மக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2023-10-02 20:36 GMT

துறையூர்:

கோரிக்கைகள்

துறையூர் பகுதியில் உள்ள நரிக்குறவர் காலனியில் சுமார் 180 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பகுதியில் ரேஷன் கடை அமைப்பதற்காக வைத்திருந்த நிலத்தை ஒருவர் ஆக்கிரமித்து, அவரது மகள் பெயரில் எழுதி வைத்ததாகவும், அந்த இடத்தை மீட்டு ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ேமலும் நரிக்குறவர் காலனியில் அடிப்படை வசதிகளான பொது கழிப்பிடம், சாலை, தெருவிளக்கு, குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். இங்குள்ள வீடுகள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. அந்த வீடுகள் சீரமைக்க வேண்டிய நிலையிலும், இடிந்து விழும் நிலையிலும் உள்ளன. இந்த வீடுகளை சீரமைத்து தர வேண்டும். மேலும் மயான வசதி உள்பட அனைத்து வசதிகளையும் மாவட்ட கலெக்டர் செய்து தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை தாசில்தாரிடம் அளிக்க அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர்.

முற்றுகை

அதன்படி அப்பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை எடுத்துக்கொண்டு, துறையூர்-முசிறி சாலையில் இருந்து ஆத்தூர் சாலை வழியாக துறையூர் தாலுகா அலுவலகத்தை அடைந்தனர். அப்போது அவர்களை கண்டதும், அங்கிருந்து வாகனத்தில் தாசில்தார் வனஜா புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அந்த வாகனத்தை நரிக்குறவர் இன மக்கள் முற்றுகையிட்டு, கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். ஆனால் அதனை ஏற்க மறுத்த தாசில்தார், திரும்பி வருவதாக கூறிவிட்டு சென்றுவிட்டார். ஆனால் பல மணி நேரம் காத்திருந்தும் தாசில்தார் வரவில்லை.

மனுக்களை பெற்றார்

இதையடுத்து நரிக்குறவர் இன மக்கள் காத்திருப்பதாக தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மீண்டும் அங்கு வந்த தாசில்தார் வனஜா மனுவை பெற்றுக்கொண்டார். இதற்கிடையே தாசில்தார் வருவதற்கு முன்னர் தாலுகா அலுவலகத்திற்கு முன்பு நரிக்குறவர் இன மக்கள் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்