திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் சர்வே பணி
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் கடந்த சில நாட்களாக என்ஜினீயர்களை கொண்ட குழுவினர் சர்வே பணியை மேற்கொண்டனர்.
நாடு முழுவதும் ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு புதிய ரெயில்களும், நவீன வசதிகளுடன் கூடிய வந்தே பாரத், தேஜஸ் ஆகிய ரெயில்களும் இயக்கப்படுகின்றன. அதோடு ரெயில்களின் வேகத்தை அதிகரிக்கும் வகையில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகிறது. மேலும் ரெயில் நிலையங்களில் பயணிகளின் வருகைக்கு ஏற்ப கூடுதலாக நவீன வசதிகளை ஏற்படுத்தப்பட இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தை பொறுத்தவரை தூத்துக்குடி, நெல்லை, திண்டுக்கல் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நவீன வசதிகள் செய்யப்பட உள்ளன. இதற்காக ரெயில் நிலையங்களில் சர்வே செய்யும் பணி நடக்கிறது. அதன்படி தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் சர்வே நடைபெற்று முடிந்தது.
இதையடுத்து திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் கடந்த சில நாட்களாக என்ஜினீயர்களை கொண்ட குழுவினர் சர்வே பணியை மேற்கொண்டனர். இதில் டிக்கெட் முன்பதிவு செய்யும் இடம், ரெயில்வே நிர்வாக அலுவலகங்கள், ரெயில்கள் நின்று செல்லும் 5 நடைமேடைகள், புதிய குட்ஷெட், காலியாக கிடக்கும் பழைய குட்ஷெட் உள்பட அனைத்து பகுதிகளையும் சர்வே செய்தனர். இதன்மூலம் ரெயில் நிலையத்தின் மொத்த பரப்பளவு, பயணிகளுக்கான வசதிகள், காலியிடம் போன்றவை கணக்கிடப்பட்டன. அதை கொண்டு பயணிகளுக்கு நகரும் படிக்கட்டுகள், சுரங்கப்பாதையை நீடித்தல், பேட்டரி கார்களை இயக்குதல், நவீன வசதியுடன் கூடிய பயணிகள் காத்திருப்பு அறை, உணவகம், கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த பரிசீலனை செய்யப்பட இருப்பதாக ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறினார்.