காரை அரசு பள்ளி வளாகத்தில் ரூ.1 லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
சமூக விரோதிகளின் நடமாட்டத்தை தடுக்க காரை அரசு பள்ளி வளாகத்தில் ரூ.1 லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது.;
பெரம்பலூர் அருகே காரை கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் காரை, தெரணி, வரகுபாடி, புதுக்குறிச்சி, நாரணமங்கலம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 485 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தநிலையில் சமூக விரோதிகள் சிலர் பள்ளி வளாகத்தில் மது அருந்தி விட்டு செல்கிறார்கள். மேலும் மதுபாட்டில்களை அங்கேயே உடைத்து விட்டு சென்று விடுகிறார்கள். இதனால் பள்ளி மாணவர்கள் கால்களில் கண்ணாடி பாட்டில் குத்தி காயம் அடைந்து வருகிறார்கள்.
இதையடுத்து, பள்ளி தலைமை ஆசிரியர் அக்பர்கான் தலைமையிலான ஆசிரியர்கள் காரை பகுதிகளில் சமூகப்பணி செய்துவரும் கலைவேந்தன் என்பவரிடம் தெரிவித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து அவர் தனது சொந்த செலவில் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் 6 கண்காணிப்பு கேமராக்களை பள்ளி வளாகத்தில் அமைத்து கொடுத்துள்ளார். இதனால் சமூகவிரோதிகள் பள்ளி வளாகத்திற்குள் வருவது அடியோடு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். இது தொடர்பாக சமூக ஆர்வலர் கலைவேந்தனிடம் கேட்டபோது பிற அரசுபள்ளிகளுக்கு உதவி தேவைப்பட்டால் தன்னால் முடிந்ததை செய்து தர தயாராக இருப்பதாகவும், ஏற்கனவே வரகுபாடி கிராமத்தில் மாற்றுத்திறனாளி மற்றும் வறியவர்கள் 10 பேரை தேர்ந்தெடுத்து இலவசமாக மாடு வாங்கி கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.