மூக்கில் சதை வளர்ந்ததால் அறுவை சிகிச்சை: மருத்துவமனையில் இருந்து நேரடியாக வந்து பிளஸ்-2 தேர்வு எழுதிய புதுக்கோட்டை மாணவி

மூக்கில் சதை வளர்ந்ததால் அறுவை சிகிச்சை செய்து கொண்ட புதுக்கோட்டை மாணவி மருத்துவமனையில் இருந்து நேரடியாக பள்ளிக்கு வந்து பிளஸ்-2 தேர்வு எழுதினார்.

Update: 2023-03-13 19:04 GMT

அறுவை சிகிச்சை

புதுக்கோட்டை மச்சுவாடி ஜீவாநகரை சேர்ந்தவர் முத்துக்குமார், வேன் டிரைவர். இவருடைய மகள் யோகேஸ்வரி (வயது 16). இவர் புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 வகுப்பில் கணினி அறிவியல் படித்து வருகிறார். இந்த நிலையில் மூக்கில் சதை வளர்ந்ததால் சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் சேர்ந்தார். அங்கு கடந்த 8-ந் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. தொடர்ந்து மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கிய நிலையில், தான் தேர்வெழுத செல்வதாக தனது தாயார் தேவியிடம் யோகேஸ்வரி தெரிவித்தார். மேலும் மருத்துவமனையில் டாக்டர்களிடம் கேட்டு அனுமதி பெற்றார். மூக்கில் பஞ்சு வைத்து அடைக்கப்பட்ட நிலையில் வாய் வழியாக தான் அவர் சுவாசிக்கிறார். அவர் அதனையும் பொருட்படுத்தாமல் தேர்வெழுத மருத்துவமனையில் இருந்து நேரடியாக ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு நேற்று காலை 10 மணியளவில் ஆட்டோவில் தனது தாயாருடன் வந்தார்.

தேர்வு அறை

அப்போது தேர்வறைக்குள் மாணவிகள் சென்ற நிலையில் தேர்வு மைய பொறுப்பாளர்கள், கண்காணிப்பாளர்கள் தேர்வு அறையின் வெளியே நின்றிருந்தனர். கடைசி நேரத்தில் வந்த மாணவி யோகேஸ்வரியிடம் விவரம் கேட்டு, அவரது நுழைவுச்சீட்டு எண்ணை தேடிப்பிடித்து, அந்த அறையில் மாணவியை அமர வைத்தனர். மாணவி தேர்வு எழுத அனுமதி கிடைக்காதோ என்ற பயத்தில் இருந்து வந்த நிலையில், தேர்வு மைய பொறுப்பாளர்கள், ஆசுவாசப்படுத்தி, பதற்றம் இல்லாமல் தேர்வெழுத அறிவுறுத்தினர்.

மேலும் தேவைப்பட்டால் சிறப்பு அனுமதி பெற்று கூடுதல் நேரம் வழங்கப்படும் என்றனர். அதன்பின் மாணவி யோகேஸ்வரி தேர்வை எழுதினார். தேர்வு மையத்தின் வெளியே அவரது தாயார் காத்திருந்தார். தேர்வு எழுதி முடிந்ததும் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். தமிழ் பாடத்தேர்வை நல்ல முறையில் எழுதியிருப்பதாக மாணவி தெரிவித்தார்.

மருத்துவமனையில் படிப்பார்

மாணவியின் தாய் தேவி கூறுகையில், ''மருத்துவமனையில் இருந்தாலும் எனது மகள் புத்தகத்தை வைத்து படித்துகொண்டு இருப்பாள். அவள் நன்றாக படிப்பாள். ஏற்கனவே உடல் நிலை சரியில்லாமல் போன போது கூட பள்ளியில் நடைபெறும் தேர்வை எழுதியிருக்கிறார். பொதுத்தேர்வு என்பதால் நம்பிக்கையுடன், தைரியமாக அவள் தேர்வு எழுத தெரிவித்ததால் டாக்டரிடம் அனுமதி கேட்டு விட்டு தான் அழைத்து வந்தோம்.'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்