மயிலம் முருகன் கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி

மயிலம் முருகன் கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;

Update: 2022-10-30 18:45 GMT

மயிலம், 

விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு மயில் வடிவிலான மலையில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் திருமண கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான விழா கடந்த 25-ந்தேதி தொடங்கியது.

தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வந்தன. மேலும் சிறப்பு யாக பூஜையும் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது.

இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சூரசம்ஹாரம்

இதையடுத்து இரவு 7 மணிக்கு ஸ்ரீ பாலசித்தர் சன்னதியில் முருகப்பெருமான் வேல் வாங்கி சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20-ம் பட்ட சிவஞான பாலசுவாமிகள் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்