இடைநிற்றல் மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை

பெரம்பலூர் மாவட்டத்தில் இடைநிற்றல் மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க கிராம போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி அறிவுரை வழங்கினார்.

Update: 2023-06-17 18:30 GMT

கிராம காவல் திட்டம்

பெரம்பலூர் மாவட்ட போலீசாரின் கிராம காவல் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து பெரம்பலூர், மங்களமேடு சரகங்களுக்குட்பட்ட கிராம போலீசாருக்கு கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமை தாங்கினார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

கிராம காவல் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு கிராமங்களிலும் போலீசாரால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அதிகப்படியான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பெரம்பலூர் மாவட்டத்தை தற்கொலைகள் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டுமென்றும், ஒவ்வொரு கிராமங்களில் உள்ள மகளிர் சுயஉதவி குழுக்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு கூட்டம் நடத்தி தற்கொலைகள் ஒருவரது கவலைகளுக்கும், பிரச்சினைகளுக்கும் கண்டிப்பாக எந்தவிதத்திலும் தீர்வுகள் தந்துவிடாது என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் போலீசார் விழிப்புணர்வு கூட்டம் நடத்த வேண்டும்.

இடைநிற்றல் மாணவர்கள்

அடையாளம் தெரியாத நபர்கள் மரணங்கள் மற்றும் காணாமல் போன நபர்கள் போன்ற வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு, அந்த வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு நீதிமன்றங்களில் வழக்குகளை முடித்து வைக்க போலீசார் கடுமையாக முயற்சிக்க வேண்டும். கிராம போலீசார் ஒவ்வொருவரும் தங்கள் கிராமங்களுக்கு சென்று பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வீட்டில் இருக்கும் இடைநிற்றல் மாணவ-மாணவிகளை கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி அவர்களும் வாழ்க்கையில் முன்னேற உதவ வேண்டும். அதிக வட்டிக்கு பணம் தருவதாக கூறி உங்களது ஆசையை தூண்டி உங்களது ரத்தத்தை வேர்வையாக சிந்தி சிறுக சிறுக உழைத்து சேர்த்த பணத்தை போலி நிறுவனத்தின் பேரில் ஏமாற்றும் நபர்களிடம் இழந்து விடாதீர்கள் என்று போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் பழனிசாமி (பெரம்பலூர் சரகம்), சீராளன் (மங்களமேடு சரகம்), தங்கவேல் (மாவட்ட குற்ற பிரிவு) மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரிகள் மற்றும் கிராம போலீசார், ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்