ஞாயிறு விடுமுறை: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்..!

ஞாயிறு விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

Update: 2023-09-24 03:04 GMT

கன்னியாகுமரி,

இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்து உள்ள கன்னியாகுமரி உலகப் புகழ் பெற்ற சர்வதேச சுற்றுலா நகரமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் சீசன் காலங்களில் மட்டும் வழக்கத்தைவிட அதிகமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு படையெடுத்து வந்த வண்ணமாக இருப்பார்கள்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரிக்கு சுற்றுலாபயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. குறிப்பாக கேரளா மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.

மேலும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில் ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தளங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடலோர பாதுகாப்பு குழுமபோலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்