கொடைக்கானலில் கோடை விழா, மலர் கண்காட்சி

கொடைக்கானலில் கோடை விழா, மலர் கண்காட்சி நாளை தொடங்குகிறது.

Update: 2023-05-24 19:00 GMT

கோடை விழா

சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலை-மலைப்பயிர்கள் துறை சார்பில் 'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் கோடை விழா மற்றும் 60-வது மலர் கண்காட்சி நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி வரை 8 நாட்கள் நடக்கிறது.

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெறும் விழாவுக்கு கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்குகிறார். திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி, இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி கோடை விழாவை தொடங்கி வைத்து பேசுகிறார். உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கண்காட்சி அரங்கை திறந்து வைக்கிறார்.

வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மலர் கண்காட்சியையும், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கலைநிகழ்ச்சிகளையும் தொடங்கி வைக்கிறார்கள்.

கலை நிகழ்ச்சிகள்

அரசு முதன்மை செயலாளர் மணிவாசன், வேளாண்மை உற்பத்தி ஆணையரும், அரசு செயலாளருமான சமயமூர்த்தி, சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனர் சந்தீப்நந்தூரி உள்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசுகின்றனர்.

கொடைக்கானலில் நடக்கும் கோடை விழாவில் முதல் 3 நாட்கள் மலர் கண்காட்சியும், 8 நாட்கள் கோடை விழாவும் நடக்கிறது. அப்போது சுற்றுலாத்துறை மூலம் மங்கள இசை, பரதநாட்டியம், தப்பாட்டம், ஒயிலாட்டம், தெம்மாங்கு இசை, ஆடல்-பாடல், பலகுரல் நிகழ்ச்சி, இன்னிசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

மேலும் 28-ந்தேதி பட்டிமன்றமும், 30-ந்தேதி படகு போட்டியும், 31-ந்தேதி கால்நடைத்துறை மூலம் நாய்கள் கண்காட்சியும் நடத்தப்பட உள்ளது. விழா ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை, சுற்றுலாத்துறை அலுவலர்கள் அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செய்து வருகின்றனர்.

பூத்துக்குலுங்கும் மலர்கள்

இதற்கிடையே மலர் கண்காட்சிக்காக 3 கட்டங்களாக பிரையண்ட் பூங்காவில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன. தற்போது அதில் பல்வேறு வண்ணங்களில் பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. இந்த பூக்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதுடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.

மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் காட்டெருமை, ஒட்டகச்சிவிங்கி, வாத்து உள்ளிட்ட விலங்குகளின் உருவங்கள் மலர்களால் வடிவமைக்கப்பட உள்ளதாக தோட்டக்கலை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்