மதுப்பழக்கத்தால் குடும்பத்தில் தகராறு: தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

மதுப்பழக்கத்தால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு, வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-07-04 20:48 GMT

சென்னிமலை

மதுப்பழக்கத்தால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு, வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

மதுப்பழக்கத்தால் தகராறு

பெருந்துறை அருகே உள்ள திங்களூர் நிச்சாம்பாளையத்தை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 32). இவரும், அதே ஊரை சேர்ந்த சுகுணா (28) என்பவரும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சிவா விஷ்ணு (7) என்ற ஒரு மகன் உள்ளார்.

ரவீந்திரன் கடந்த சில மாதங்களாக தனது மனைவி மற்றும் மகனுடன் சென்னிமலை அருகே ஈங்கூர் சரவம்பதி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். ரவீந்திரனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதற்காக ரவீந்திரன் திருச்செங்கோட்டில் உள்ள மது அடிமை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றார். அதன் பிறகும் மது குடித்துவிட்டு வீட்டில் தினமும் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

தூக்கில் தொங்கினார்...

இந்தநிலையில் கடந்த 2-ந் தேதி தனது மனைவி சுகுணாவிடம் ரவீந்திரன் தகராறில் ஈடுபட்டு, அவரை அவருடைய அம்மா வீட்டுக்கு அனுப்பி உள்ளார். அதன்பின்னர் வாழ்க்கையில் வெறுப்படைந்த ரவீந்திரன் நேற்று முன்தினம் வீட்டிலிருந்த மின் விசிறியில் துணியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் தெரிந்ததும் அவருடைய மனைவி சுகுணா மற்றும் உறவினர்கள் அங்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். பின்னர் இதுகுறித்து சென்னிமலை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த சென்னிமலை போலீசார் ரவீந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Tags:    

மேலும் செய்திகள்