பரமத்திவேலூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
பரமத்திவேலூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கூலித்தொழிலாளி
பரமத்திவேலூர் தாலுகா, பாண்டமங்கலம் அருகே உள்ள கொளக்காட்டுப்புதூரைச் சேர்ந்தவர் பிரனேஷ் (வயது 28). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ஜோதி (25). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. 3 மற்றும் 5 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.
பள்ளிக்கு செல்லும் தங்களது மகன்களுக்கு பள்ளி கட்டணம் செலுத்துவதற்கு ஜோதி தனது கணவர் பிரனேஷிடம் பணம் கேட்டுள்ளார். அப்போது கணவன், மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த ஜோதி கடந்த 15-ந் தேதி விஷம் குடித்தார்.
உதவி கலெக்டர் விசாரணை
இதில் மயக்கமடைந்த அவரை கணவர் பிரனேஷ் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜோதி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 6 ஆண்டுகளில் பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து திருச்செங்கோடு உதவி கலெக்டர் இளவரசி விசாரணை நடத்தி வருகிறார்.