ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் ரிக் வண்டி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை-திருச்செங்கோட்டில் பரிதாபம்

திருச்செங்கோட்டில் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் ரிக் வண்டி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-06-08 18:29 GMT

எலச்சிபாளையம்:

ரிக் வண்டி டிரைவர்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வாலரை கேட் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 32). ரிக் வண்டி டிரைவர். இவருடைய மனைவி சரண்யா (29). இந்த தம்பதிக்கு சுபிஷா (11), சமீனா (8) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு சங்கர் ஆன்லைனில் பணம் கட்டி கேம் விளையாடி வந்துள்ளார். இதில் அவர் அளவுக்கு அதிகமான பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. மேலும், புதிதாக வீடு ஒன்றும் வாங்கி உள்ளார். இதற்காக அவர் பலரிடம் கடன் பெற்றதாகவும் தெரிகிறது.

பண பிரச்சினை

ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்தது மற்றும் கடன் பிரச்சினை காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சங்கர் தற்கொலைக்கு முயன்றார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று சங்கர் வீடு திரும்பினார்.

இருந்தபோதிலும் அவர் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு மனைவி சரண்யா ஆறுதல் கூறி வந்துள்ளார். மேலும், 'நாம் சம்பாதித்து பண பிரச்சினைகளை சரி செய்து கொள்ளலாம்' என்றும் தெரிவித்துள்ளார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்தநிலையில் நேற்று சங்கர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது ஆன்லைன் விளையாட்டில் பணம் இழந்தது மற்றும் கடன் பிரச்சினையால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு டவுன் போலீசார் விரைந்து சென்று சங்கர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருடைய உடலை பார்த்து மனைவி சரண்யா மற்றும் உறவினர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்