சேதமடைந்த வீட்டை சீரமைக்க முடியாததால்மாற்றுத்திறனாளி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2023-07-27 19:00 GMT

அரூர்:

அரூர் அருகே சேதமடைந்த வீட்டை சீரமைக்க முடியாததால் வேதனை அடைந்த மாற்றுத்திறனாளி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாற்றுத்திறனாளி

அரூர் அருகே உள்ள பழைய கொக்கரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 35). மாற்றுத்திறனாளி. இவருக்கு திருமணமாகி சுகுணா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழனிவேல் வசிக்கும் வீடு சேதம் அடைந்தது. இதனால் தங்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யுமாறு உள்ளாட்சி பிரதிநிதியிடம் கேட்டுள்ளார்.

அதற்குரிய தொகையை செலுத்தினால் வீடு ஒதுக்கீடு செய்யப்படும் என்று அப்போது கூறப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொக்கரப்பட்டியில் மழை பெய்ததால் சேதமடைந்த வீட்டில் தங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பழனிவேல் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அந்த பகுதியில் உள்ள ரேஷன் கடை வளாகத்தில் தங்கியுள்ளார்.

தற்கொலை

இதுபற்றி தகவல் அறிந்த அந்த பகுதியின் கிராம நிர்வாக அலுவலர் அங்கு சென்று, பழனிவேல் மற்றும் குடும்பத்தினரை சமாதானப்படுத்தினார். இதையடுத்து குடும்பத்தினருடன் வீட்டுக்கு திரும்பிய பழனிவேல் சேதமடைந்த வீட்டை சீரமைக்க முடியவில்லையே என்று மன வேதனையில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் தனது வீட்டில் மேற்கூரையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த கோபிநாதம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பழனிவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏழ்மைநிலை காரணமாக சேதமடைந்த வீட்டை சீரமைக்க முடியாத நிலை ஏற்பட்டதால் மாற்றுத்திறனாளி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்