விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் டெண்டர் திடீர் நிறுத்தம்
விருத்தாசலம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் டெண்டர் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் 25 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட, குளிர் பதன கிடங்கு உள்ளது. இதில் விவசாயிகள் தங்களின் வேளாண்பொருட்களை சேமிக்க ஆண்டு தோறும் டெண்டர் விடப்படுகிறது. அதன்படி நடப்பாண்டிற்கான டெண்டரை கடலூர் வேளாண் விற்பனை குழு செயலாளர் கடந்த 22-ந்தேதி அறிவித்தார்.
அதில், கடந்த 23-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை ஒப்பந்தபுள்ளி விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், அதில், நேற்று டெண்டர் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, மாலை ஒப்பந்தபுள்ளி படிவங்கள் பிரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, நேற்று மாலை 3 மணிக்கு டெண்டர் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, மாலை 4 மணிக்கு படிவங்கள் பிரிக்கப்பட்டது. அப்போது, அங்கு வந்த தி.மு.க. நகராட்சி கவுன்சிலர் ஒருவரும், மற்றொரு தி.மு.க. பிரமுகரும் முறையான அறிவிப்பின்றி டெண்டர் நடத்தக்கூடாது. நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என கூறி, மார்க்கெட் கமிட்டி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா
அப்போது, மார்க்கெட் கமிட்டி கண்காணிப்பாளர் ராஜேஸ்வரி, தேதி குறிப்பிடாமல் டெண்டர் ஒத்தி வைக்கப்படுவதாக கூறி, அங்கிருந்து சென்றார். இதனால், டெண்டரில் பங்கேற்ற விவசாயிகள், டெண்டரை தொடர்ந்து நடத்த வேண்டுமென கூறி, மார்க்கெட் கமிட்டி அலுவலகம் முன்பு திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதை கேட்டதும் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது..