சென்னையில் திடீரென கொட்டும் கனமழை - காரணம் என்ன...? பாலச்சந்திரன் பேட்டி
தமிழகத்தில் வரும் 20ம் தேதி வரை இடியுடன் கூடிய கோடை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை உள்பட தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இந்த நிலையில் சென்னையில் கடந்த சில மணி நேரங்களாக சென்னையின் முக்கிய
பகுதிகளில் மிதமான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
சென்னை அண்ணாசாலை, தேனாம்பேட்டை, மயிலாப்பூர், எழும்பூர், நுங்கம்பாக்கம், வேளச்சேரி, ஆலந்தூர், ஆதம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான தகவல் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் சென்னை வேளச்சேரியில் காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்துள்ளது அந்த பகுதி மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் ஆலங்கட்டி மழை பெய்து பல வருடங்கள் ஆகிவிட்டதை அடுத்து தற்போது மீண்டும் ஆலங்கட்டி மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தநிலையில், வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அடுத்த 4 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை தொடரும். தமிழகத்தில் வரும் 20ம் தேதி வரை இடியுடன் கூடிய கோடை மழை பெய்யும். மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பம் பதிவாகும்.
கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திப்பதால் மழை பெய்கிறது என்றார்.