கும்மிடிப்பூண்டியில் பழைய இரும்பு பொருட்கள் குடோனில் திடீர் தீ விபத்து - 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்
கும்மிடிப்பூண்டியில் தனியாருக்கு சொந்தமான காயலான்கடை குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 2 தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் அடுத்த பைபாஸ் சாலையில் பெத்திக்குப்பம் பகுதியில் ரவி (வயது 56) என்பவருக்கு சொந்தமான ஆணி தொழிற்சாலையும், அதனையொட்டி பழைய இரும்பு பொருட்களுக்கான குடோனும் உள்ளது. இந்த குடோனில் பழைய இரும்பு தகடுகளை வெல்டிங் வேலை நடப்பது வழக்கம். இங்கு எண்ணெய் கசிவுடன் கூடிய பழைய ரப்பர் மற்றும் பழைய காரின் உதிரிபாகங்களும் குவிக்கப்பட்டு இருந்தது. நேற்று பிற்பகல் மேற்கண்ட குடோனில் இருந்த 2 தொழிலாளிகளும் சாப்பாட்டிற்கு சென்றனர்.
நிலையில் குடோனில் திடீரென தீ பிடித்து மளமளவென பரவியது. தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 2 வாகனங்கள் மூலம் 1 மணி நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை முழுமையாக அணத்தனர். தீ பரவும்போது அங்கு தொழிலாளிகள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. பழைய தகடுகளை வெல்டிங் செய்து கட்டர் மூலம் அறுத்த போது அதிலிருந்து பரவிய நெருப்பு துகள்களால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.