ஓடும் காரில் திடீர் தீ

தக்கலையில் ஓடும் காரில் திடீர் என தீப்பிடித்தது. இதில் பச்சிளம்குழந்தை உள்பட 4 பேர் உயிர் தப்பினர்.

Update: 2023-04-11 18:45 GMT

தக்கலை:

தக்கலையில் ஓடும் காரில் திடீர் என தீப்பிடித்தது. இதில் பச்சிளம்குழந்தை உள்பட 4 பேர் உயிர் தப்பினர்.

ஓய்வு பெற்ற போலீஸ்காரர்

தக்கலை அருகே உள்ள கொற்றிக்கோடு பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (வயது 56). விருப்ப ஓய்வு பெற்ற போலீஸ்காரர். இவருடைய மனைவி சாந்தி (50). இவர்களுடைய மகள் மினு (27). இவருக்கு பிறந்து 45 நாட்களான பெண் குழந்தை உள்ளது. அந்த குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக நேற்று காலை காரில் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். காரை கிறிஸ்டோபர் ஓட்டினார். உடன் சாந்தி, மினு ஆகியோரும் சென்று இருந்தனர்.

குழந்தைக்கு தடுப்பூசி போட்டுவிட்டு மீண்டும் வீட்டிற்கு காரில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர், மாலை 4.20 மணியளவில் தக்கலை பஸ் நிலையத்தை தாண்டி ஒரு தனியார் வங்கி அருகில் வரும்போது காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்தது. உடனே சுதாரித்து கொண்ட கிறிஸ்டோபர் காரை நடுரோட்டில் நிறுத்திவிட்டு, அதில் இருந்த அனைவரையும் கீழே இறங்க கூறினார். அதன்படி காரில் இருந்து அனைவரும் இறங்கினர்.

திடீர் தீ விபத்து

அவர்கள் இறங்கியதுமே கார் திடீரென்று தீப்பிடித்து 'மள மள' வென எரிய தொடங்கியது. இதனால் அந்த பகுதியில் புகை பரவியது. இதை கண்ட அப்பகுதி கடைக்காரர்கள் உடனே தண்ணீரை வாளி மற்றும் குடங்களில் கொண்டு வந்து கார் மீது ஊற்றினார்கள். இதனால் தீ அணைந்த போதிலும் காரில் இருந்து புகை வந்து கொண்டே இருந்தது.

இதுபற்றி தக்கலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கார் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து முழுமையாக அணைத்தனர்.

4 பேர் உயிர் தப்பினர்

காரில் இருந்து புகை வருவதை கண்டவுடன் கிறிஸ்டோபர் அதை நிறுத்திவிட்டு, காரினுள் இருந்த அனைவரும் வெளியேறியதால் நான்கு பேரும் காயமின்றி உயிர் தப்பினார்கள்.

தேசிய நெடுஞ்சாலையில் திடீரென கார் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தால் அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது ேநரம் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்