ஊட்டியில் 5 வீடுகளில் திடீர் தீ விபத்து-பொருட்கள் எரிந்து நாசம்

ஊட்டியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 5 குடிசைகள் எரிந்து நாசமானது.

Update: 2023-03-10 18:45 GMT

ஊட்டி

ஊட்டியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 5 குடிசைகள் எரிந்து நாசமானது.

திடீர் தீ விபத்து

நீலகிரி மாவட்டம் ஊட்டி மேரீஸ்ஹில் பகுதியில் ரட்டன் டாடா ஓய்வு விடுதி அமைந்து உள்ளது. இந்த விடுதியின் பின்புறம் சுமார் 50 குடிசை வீடுகள் உள்ளன. இந்தப் பகுதி பொதுமக்கள் பெரும்பாலும் கூலித் தொழிலுக்கு செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் அங்குள்ள குடியிருப்புகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ அங்கிருந்து குடிசை வீடுகளுக்கும் பரவியது. குடிசை வீடுகள் பலகை மற்றும் தகரத்தால் அமைந்திருந்ததாலும், காற்றின் வேகம் சற்று இருந்ததாலும் தீ வேகமாக பரவியது. இதனால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். மேலும், மின் வாரிய ஊழியர்கள் அந்த பகுதிக்கான மின் இணைப்பை துண்டித்தனர். தீ பரவியதை அடுத்து அப்பகுதி மக்கள் குடிசை வீடுகளிலிருந்த மின் சாதனங்கள், எரிவாயு சிலிண்டர்கள் ஆகியவற்றை வேகமாக அப்புறப்படுத்தினர்.

5 வீடுகள் சேதம்

இந்தநிலையில் ஊட்டி நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் அந்த பகுதிக்குள் வாகனம் செல்ல முடியவில்லை. மேலும் தீயணைப்பு வாகனத்தில் இருந்து அவ்வளவு தூரத்திற்கு டியூப்பை கொண்டு வர முடியவில்லை. தீ ஏற்பட்ட பகுதிக்கு தீயணைப்பு வாகனம் செல்ல முடியாததால், பொதுமக்களுடன் இணைந்து குடங்கள் மற்றும் வாளிகளில் தண்ணீர் நிரப்பி வந்து தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். ஒரு வழியாக மாற்று ஏற்பாடு செய்து இறுதியில் தண்ணீரை பீய்ச்சி அடித்து முழுவதுமாக தீயை அணைத்தனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீயை தீயணைப்புத்துறை வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

குட்டிகளுடன் நாய் கருகி சாவு

சம்பவ இடத்தில் ஊட்டி நகர போலீஸ் துணை சூப்பிரண்டு யசோதா தலைமையில் போலீசார் சென்று பார்வையிட்டனர். .இதில் அந்த பகுதியில் வசிக்கும் ரேணுகா, பிரேமா, சாந்தி, லதா மற்றும் அருள்தாஸ் ஆகியோரின் வீடுகள் தீப்பிடித்து எரிந்தது. வீட்டிலிருந்த விறகுகளில் தீ பரவியதால் விபத்து ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், '5 வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமாகி விட்டன. ஒரு வீட்டில் நாய் குட்டி ஈன்று இருந்தது. நாய் மற்றும் குட்டிகள் தீயில் சிக்கி உயிரிழந்து விட்டது. இந்த வீட்டு உரிமையாளர்கள் அனைவரும் தினக்கூலிகள். அவர்கள் அனைத்தையும் இழந்துள்ளனர். அவர்களின் நிலை கேள்விக்குறியாகி விட்டது' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்