நுண்ணீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு மானியம்

நுண்ணீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுவதாக தியாகதுருகம் வேளாண்மை உதவி இயக்குனர் சந்துரு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது:

Update: 2022-09-18 17:20 GMT

கண்டாச்சிமங்கலம், 

தியாகதுருகம் பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரங்களை அதிக அளவில் விவசாய உபயோகத்திற்கு பயன்படுத்துவதால் நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. மேலும் மழை குறைவாக பெய்யும் ஆண்டுகளில் வறட்சி பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே தற்போது இருக்கும் நீர் ஆதாரத்தினை கொண்டு பயிர்களுக்கு குறைந்த அளவில் தண்ணீர் பாசனம் செய்து அதிக விளைச்சல் பெறுவதற்கு நுண்ணீர் பாசன முறை மிகவும் ஏற்றதாகும். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு நுண்ணீர் பாசன முறைகளை அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் வரை மானியம் அளிக்கிறது. இந்த மானியத்தை பெறுவதற்கு விவசாயிகள் சிறு, குறு விவசாயிகள் என சான்று பெற்றிருக்க வேண்டும். இதர பெருவிவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் நெற்பயிரை தவிர அனைத்து பயிர்களுக்கும் நுண்ணீர் பாசனம் அமைக்கலாம். நுண்ணீர் பாசனத்தில் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் என இருவகை உள்ளது. பயிறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களுக்கு ஸ்பிரிங்களர் மற்றும் மழை தூவுவான் ஆகிய தெளிப்பு நீர் பாசன முறைகளை அமைக்கலாம். கரும்பு, மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க பரிந்துரை செய்யப்படுகிறது. சொட்டுநீர் பாசனம் அமைக்கப்பட்ட கரும்பு வயலில் நீரில் கரையும் உரங்களை நேரடியாக பயிரின் வேருக்கு செலுத்தலாம். இதன்மூலம் பயிர் வளர்ச்சி அதிகமாவதுடன் களைகள் வளர்வது குறைக்கப்படுகிறது. நடப்பு ஆண்டில் தியாகதுருகம் வட்டாரத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்க 204 எக்டர் பொருள் இலக்கும், ரூ.3 கோடியே 68 லட்சம் நிதி இலக்கும் அளிக்கப்பட்டுள்ளது. எனவே நுண்ணீர் பாசனம் தேவைப்படும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், ரேசன் அட்டை, ஆதார், சிறு, குறு விவசாயிகள் சான்று, நில வரைபடம், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்-2 ஆகியவற்றுடன் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்