கால்நடை தீவன விதைகள் வாங்க மானியம்

கால்நடை தீவன விதைகள் வாங்க மானியம் வழங்கப்படுகிறது.

Update: 2022-11-11 18:36 GMT

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் 2022-23-ம் நிதி ஆண்டிற்கு ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு கால்நடைகளுக்கு தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க விதைத்தொகுப்பு மற்றும் புல்கறணைகள் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். 18 முதல் 65 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் தீவனப்புல் மற்றும் புல்கறணைகள் வளர்க்க ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு விதிமுறைகளின்படி பரிந்துரைக்கப்படும். விவசாயிகள் பால் உற்பத்தியர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும் அல்லது உறுப்பினராக சேர வேண்டும். தீவன விதைகள் ஆவின் நிறுவனம் மற்றும் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்படும். மேலும், பயனாளிகளுக்கு விதைத்தொகுப்பு, புல்கறணைகளுடன் அத்தீவனங்களை வளர்க்க தேவையான பயிற்சி கையேடுகள் மற்றும் களப்பயிற்சி ஆகியவற்றிற்கான செலவினங்கள் ஒரு பயனாளிக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் என்ற மானியத் தொகைக்குட்பட்டு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மூலம் செயல்படுத்தப்படும். மேலும், இது தொடர்பான விவரங்களை புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக சாலையில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்