மாடித்தோட்டம் அமைக்க 50 சதவீத மானியம்

தேவகோட்டை பகுதியில் மாடித்தோட்டம் அமைக்க 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது என்று தோட்டக்கலை உதவி இயக்குனர் தகவல் தெரிவித்து உள்ளார்.

Update: 2023-05-23 18:45 GMT

தேவகோட்டை,

தேவகோட்டை பகுதியில் மாடித்தோட்டம் அமைக்க 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது என்று தோட்டக்கலை உதவி இயக்குனர் தகவல் தெரிவித்து உள்ளார்.

மாடித்தோட்டம்

தேவகோட்டை நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்கள் தங்கள் வீட்டின் மேல்பகுதியில் மாடித் தோட்டம் அமைக்க தோட்டக்கலைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டிற்கு (2023-2024) மானியம் வழங்கப்படுகிறது. மாடித்தோட்டம் அமைப்பதற்குரிய மாடித்தோட்ட தளைகள், செடி வளர்ப்பு பைகள்(6) , 2 கிலோ தென்னை நார் கழிவு கட்டிகள் (6), 6 வகையான வீரிய ஒட்டுரகம் மற்றும் பாரம்பரிய காய்கறி விதைகள், அசோஸ்பைரில்லம், 200 மி.லி பாஸ்போ பாக்டீரியா, 200 மி.லி. டிரைக்கோடெர்மா, விரிடி 200 கிராம், வேப்ப எண்ணெய் மருந்து 100 மி.லி மற்றும் மாடித்தோட்ட காய்கறி வளர்ப்பிற்குரிய பயிற்சி கையேடு ஆகியவற்றை கொண்ட தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம். தொகுப்பின் மொத்த விலை ரூ.900 ஆகும்.

மானியம்

இதில் 50 சதவீத மானியத்தில் ரூ.450 மட்டும் செலுத்தி பயனாளிகள் பெற்றுக் கொள்ளலாம். ஒரு பயனாளி அதிகபட்சமாக 2 தொகுப்புகள் வரை பெறமுடியும். இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் தேவகோட்டை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பதிவு செய்து கொள்ளலாம். இணைய தளத்தில் நேரடியாக விண்ணப்பிக்க www.tnhortnet.gov.in என்ற இணையதளத்திலும் பதிவு செய்து மாடித்தோட்ட தளைகளை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த தகவலை தேவகோட்டை தோட்டக்கலை உதவி இயக்குனர் சத்யா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்