காரப்பாக்கத்தில் அடுத்தடுத்து சம்பவம்: மூதாட்டி, கம்ப்யூட்டர் என்ஜினீயரை தாக்கி நகை பறிப்பு - மர்ம ஆசாமிகள் அட்டூழியம்
காரப்பாக்கத்தில் அடுத்தடுத்து மூதாட்டி மற்றும் கம்ப்யூட்டர் என்ஜினீயரை தாக்கி நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.;
சென்னையை அடுத்த காரப்பாக்கத்தை சேர்ந்தவர் சொக்குபாய் (வயது 73). இவர், அதே பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகிறார். கடை வாசலில் நின்றிருந்த மூதாட்டி சொக்குபாயிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் முகவரி கேட்பது போல் நடித்து, திடீரென அவர் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்தனர்.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த மூதாட்டி, கொள்ளையர்கள் நகையை பறிக்க விடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டார். ஆனாலும் கொள்ளையர்கள் மூதாட்டியை சுமார் 100 மீட்டர் தூரம் வரை தரதரவென இழுத்து சென்று, அவரை காலால் எட்டி உதைத்து விட்டு நகையுடன் தப்பிச் சென்றனர். இதில் பலத்த காயமடைந்த மூதாட்டியை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் நடைபெற்ற அடுத்த ஒரு மணி நேரத்தில் காரப்பாக்கம் வேண்டவராசி அம்மன் கோவில் தெருவில் நடந்து சென்ற சோழிங்கநல்லூரை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயரான ஆனந்த் (27) என்பவரை மர்மநபர்கள் 2 பேர் தாக்கி கீழே தள்ளி விட்டு அவர் கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் நகையை பறித்துச்சென்று விட்டனர். அடுத்தடுத்து நடந்த இந்த 2 சம்பவங்கள் குறித்தும் கண்ணகி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.