தொகுதி மறுசீரமைப்பு கூட்டம்: கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் சென்னை வருகை
தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் பங்கேற்பதற்காக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் சென்னை வந்துள்ளார்.;

சென்னை,
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (சனிக்கிழமை) கூட்டு நடவடிக்கைக் குழு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கேரள, தெலங்கானா, பஞ்சாப் மாநில முதல்-மந்திரிகளுக்கு, கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமாரும் கலந்து கொள்ள உள்ளனர்.
அதேபோல் பல்வேறு மாநிலங்களில் இருந்து 20-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி வரையறை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுவதுடன், முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தொகுதி மறுவரையறை தொடர்பாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்க கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் சென்னை வந்துள்ளார். சென்னை விமான நிலையம் வந்த அவரை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பினராயி விஜயன் தங்கியுள்ளார்.