திருத்துறைப்பூண்டியில், சார்பு நீதிமன்றம்

திருத்துறைப்பூண்டியில், சார்பு நீதிமன்றத்தை மாவட்ட நீதிபதி சாந்தி திறந்து வைத்தார்.

Update: 2023-03-10 19:00 GMT

திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டியில், சார்பு நீதிமன்றத்தை மாவட்ட நீதிபதி சாந்தி திறந்து வைத்தார்.

சார்பு நீதிமன்றம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் வழக்குகள் திருத்துறைப்பூண்டியில் உள்ள கோர்ட்டில் நடைபெறும். திருத்துறைப்பூண்டியில் குற்றவியல் நடுவர் கோா்ட்டு,, மாவட்ட உரிமையியல் கோா்ட்டு, மற்றும் காசோலை வழக்குகளை விசாரிக்கும் விரைவு கோர்ட்டு உள்ளது. திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் நடைபெறும் ் வழக்குகள் தொடர்பாக மேல்முறையீடு செய்ய திருவாரூர் அல்லது மன்னார்குடிக்கு செல்ல வேண்டிய சூழல் இருந்து வந்தது. இதனால் திருத்துறைப்பூண்டி பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். எனவே கடந்த 20 ஆண்டுகளாக திருத்துறைப்பூண்டியில் ஒரு சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் மற்றும் வக்கீல்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

திறப்பு விழா

இந்த நிலையில் திருத்துறைப்பூண்டியில் சார்பு நீதிமன்றம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாரம்பரியமிக்க நீதிமன்ற கட்டிடத்தை பராமரிப்பு பணிகள் செய்து அந்தக் கட்டிடத்தில் சார்பு நீதிமன்றத்துக்கான அனைத்து கட்டமைப்பு வேலைகளும் பார்க்கப்பட்டு நேற்று திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட நீதிபதி சாந்தி கலந்து கொண்டு சார்பு நீதிமன்றத்தை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்கள் பயன் பெறும் வகையில்...

இன்று(நேற்று) பெண் நீதிபதிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நீதிமன்றத்தை திறந்து வைப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். சென்னை ஐகோர்ட்டு வழிகாட்டுதலோடு இந்த கோர்ட்டு திறப்பு விழா பணிகள் நடைபெறுகிறது. இனி மேல்முறையீடு செய்ய மன்னார்குடி மற்றும் திருவாரூர் செல்ல தேவை இல்லை. போலீசாா், பொதுமக்கள், வக்கீல்கள் பயன்பெறும் வகையில் இந்த கோர்ட்டு அமைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.விழாவில் மாவட்ட குற்றவியல் நீதிபதி பாலமுருகன், திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், மற்றும் சார்பு நீதிமன்ற நீதிபதி சரண்யா, செல்வராசு எம்.பி., மாரிமுத்து எம்.எல்.ஏ., திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன், திருத்துறைப்பூண்டி வக்கீல்கள் சங்க தலைவர் அருள்செல்வம், செயலாளர் செந்தில்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா். பின்னர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறுவதை அருகில் உள்ள வக்கீல்கள் அமரும் நாற்காலியில் அமர்ந்து கலெக்டர் சாருஸ்ரீ, மாவட்ட நீதிபதி சாந்தி, போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், உள்ளிட்டோர் பார்த்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்