வகுப்பை புறக்கணித்துவிட்டு புத்தகப்பையுடன் கலெக்டர் அலுவலகம் வந்த மாணவர்கள்

வகுப்பை புறக்கணித்து விட்டு புத்தகப்பையுடன் கள்ளக்குறிச்சி கலெக்டரிடம் சாலையை சீரமைத்துதரக்கோரி மாணவ-மாணவிகள் மனு கொடுக்க வந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது

Update: 2023-07-31 18:45 GMT

கள்ளக்குறிச்சி

வீ.பாளையம் ஊராட்சி

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வீ.பாளையம் ஊராட்சியில் உள்ள அண்ணாநகர் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வீ.பாளையத்திலிருந்து சுமார் 2½ கிலோ மீட்டர் தொலைவில் அண்ணாநகர் உள்ளது. இ்ந்த நகருக்கு செல்லும் சாலை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தரமில்லாமல் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்த சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர். குறிப்பாக பள்ளிக்கு வாகனங்களில் சென்று வரும் மாணவ, மாணவிகளும் அல்லல்படுகின்றனர்.

கால்கடுக்க நடந்து...

சாலை பழுதடைந்து இருப்பதால் கடந்த ஒரு வருடமாக பள்ளி வாகனங்களும் அண்ணாநகருக்குள் வரவில்லை. இதனால் மாணவ-மாணவிகள் குண்டும், குழியுமான சாலையில் சுமார் 2½ கிலோ மீட்டர் தூரம் கால்கடுக்க நடந்து பள்ளிக்கு சென்று வருகிறார்கள். சில நேரங்களில் பள்ளியை சென்றடைய காலதாமதம் ஏற்படுவதோடு, தினக்கூலி வேலைக்கு செல்லும் பெற்றோர் குறித்த நேரத்தில் வேலைக்கும் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே சாலையை சீரமைத்து தரக்கோரி வீ.பாளையம் ஊராட்சியில் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

கலெக்டர் அலுவலகத்துக்கு...

இதனால் ஆத்திரம் அடைந்த 50-க்கும் மேற்பட்ட பள்ளி, மாணவ-மாணவிகள் நேற்று காலை பள்ளிக்கு செல்லாமல் வகுப்பை புறக்கணித்து விட்டு புத்தகப் பையை சுமந்தபடி பெற்றோருடன் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். குண்டும், குழியுமான சாலையுடன் கூடிய புகைப்படத்தையும் கையில் பிடித்து இருந்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமாரை நேரில் சந்தித்து சாலையை சீரமைத்து தரக்கோரி மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன் பின்னர் மாணவர்கள், பெற்றோருடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

பரபரப்பு

வகுப்பை புறக்கணித்து விட்டு மாணவ, மாணவிகள் பெற்றோருடன் சாலையை சீரமைத்து தரக்கோரி கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த சம்பவத்தால் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்