பெற்றோர்கள்-ஆசிரியர்களுக்கு மாணவர்கள் அடிபணிந்து நடக்க வேண்டும்சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் பேச்சு

பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் அடிபணிந்து நடக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் பேசினார்.

Update: 2023-09-05 21:43 GMT

அம்மாபேட்டை

பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் அடிபணிந்து நடக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் பேசினார்.

ஆசிரியர் தினம்

அம்மாபேட்டை அருகே உள்ள சிங்கம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட கல்வி அலுவலர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எ.மோகன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் கே.விஜயன் வரவேற்று பேசினார்.

விழாவில் சுப்ரீம் கோா்ட்டு முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள முன்னாள் கவர்னருமான பி.சதாசிவம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ- மாணவிகள் மத்தியில் தன்னுடைய பள்ளிக்கூட நிகழ்வுகளை நினைவுகூர்ந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தலைமை நீதிபதியாக...

அரசு வக்கீல், ஐகோர்ட்டு நீதிபதி, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மற்றும் சுப்ரீம் கோா்ட்டு தலைமை நீதிபதி என 19 ஆண்டுகள் நான் பணிபுரிந்து உள்ளேன். அதில் ஜனாதிபதி மாளிகையில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவியேற்ற பின் அங்கிருந்து காரில் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றேன். அப்போது செல்லும் வழியில் முதலில் என் நினைவுக்கு வந்தது நான் படித்த அரசு பள்ளியும், எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களும் தான். எங்கோ ஒரு மூலையில் விவசாய குடும்பத்தில் பிறந்து கடினமான முயற்சியில் ஒரு உயர்ந்த பதவியை அடைந்துள்ளோம் என்று நினைத்தபோது உணர்ச்சிவசப்பட்டதுடன், பெருமை அடைந்து கொண்டேன். இதை எதற்காக சொல்கிறேன் என்றால் மாணவர்கள் எப்போதும் பொறுப்புணர்வுடனும், கடமை உணர்வுடனும், உயர்ந்த நோக்கத்துடனும் படித்து சிறப்பாக செயல்பட வேண்டும். நேரம் தவறாமை, ஒழுக்கம் ஆகியவற்றை கடைபிடித்து ஆர்வத்துடன் கல்வி கற்று முன்னேற வேண்டும். இதற்காக மாணவர்கள் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அடிபணிந்து நடக்க வேண்டும். மேலும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஊக்கம் அளித்து உயர்த்தி செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விருது

இதைத்தொடர்ந்து அவர் சிறப்பாக பணியாற்றிய 34 ஆசிரியர்களுக்கு விருது வழங்கி பாராட்டினார். இதையொட்டி தமிழக அரசின் 'நம்ம ஊர், நம்ம பள்ளி திட்டம்' தொடங்கப்படுவது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் மாணவர்கள் எம்.பி.அறிவானந்தம், பி.ஜி.முனியப்பன், எம்.ஈஸ்வரன் உள்பட பெற்றோர், ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் மாதேஸ்வரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்