அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் நுழைவு வாயிலை மூடி போராட்டம்

அரசு கலை கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரியின் நுழைவு வாயிலை மூடி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-10-06 18:45 GMT

செமஸ்டர் தேர்வு கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி திருவண்ணாமலையில் கலைஞர் கருணாநிதி அரசு கலை கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரியின் நுழைவு வாயிலை மூடி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கல்லூரி மாணவர்கள்

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் செங்கம் சாலை பிரியும் இடத்தில் கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி அமைந்து உள்ளது. இந்த கல்லூரி திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றது.

கல்லூரியில் காலை, மாலை என இரு சுழற்சியாக திருவண்ணாமலை மட்டுமின்றி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது இளங்கலை மற்றும் முதுகலையை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு செமஸ்டர் தேர்வு கட்டணங்களை திருவள்ளுவர் பல்கலைக்கழகம் பல மடங்கு உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண்களை குறைத்து போட்டதாகவும் மாணவர்கள் கடந்த 2 மாதமாக கல்லூரியில் பல்வேறு கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். தேர்வு கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி கடந்த 3-ந் தேதி கல்லூரி நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நுழைவு வாயிலை மூடினர்

இந்த நிலையில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் தேர்வு கட்டணத்தை குறைக்காமலும், மதிப்பெண்கள் குறித்து எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை என கூறி நேற்று இந்திய மாணவர் சங்கம் சார்பில் திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி வாயில் முன்பு ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஒன்று திரண்டு கல்லூரி நுழைவு வாயிலை அடைத்தனர். பின்னர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை எதிர்த்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையிலான போலீசார் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் கல்லூரியின் வாயிற் கதவை திறக்க போலீசார் முயற்சித்தனர். அப்போது மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும்வாக்குவாதம் ஏற்பட்டது.

திடீர் மறியல்

அதை தொடர்ந்து இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் வாகனத்தில் ஏற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கல்லூரி மாணவ, மாணவிகள் போலீசாரின் வாகனத்தை மறித்து செங்கம் சாலையில் தரையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீசார் வாகனத்தில் இருந்த இந்திய மாணவர் சங்கத்தின் நிர்வாகிகளை இறக்கி விட்டனர். அதன்பின்னர் மாணவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

தொடர்ந்து இது குறித்து மாணவர்கள் கூறுகையில், ''திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்காவிட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவ, மாணவிகளையும் ஒன்று திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளோம்'' என்று தெரிவித்தனர்.

தொடர்ந்து சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற மாணவர்களின் இந்த போராட்டத்தால் திருவண்ணாமலையில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்