மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடப்பதாக கூறிஅரசு கலைக்கல்லூரியை மாணவர்கள் முற்றுகைதிருவெண்ணெய்நல்லூரில் பரபரப்பு

திருவெண்ணெய்நல்லூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடப்பதாக கூறி மாணவர்கள் கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-07-07 18:45 GMT

திருவெண்ணெய்நல்லூர், 

முற்றுகை

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு 2023-24-ம் கல்வி ஆண்டுக்கான இறுதி கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று காலை நடந்தது. அப்போது கல்லூரி கதவுகள் மூடப்பட்டு, ஒரு சில மாணவ-மாணவிகள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களை மட்டும் உள்ளே வரவழைத்து சேர்க்கை நடந்ததாக கூறப்படுகிறது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற மாணவர்கள் மற்றும் அவர்களுடன் வந்திருந்த பெற்றோர்கள், மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடைபெறுவதாகவும், பணம் வாங்கிக்கொண்டு சேர்க்கை நடைபெறுவதாக கூறி திடீரென கல்லூரி நுழைவு வாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தள்ளுமுள்ளு

மேலும் அவர்களுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் முருகன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆகியோர் மாணவர்கள், பெற்றோர்களுடன் கல்லூரி கதவைத் திறந்து உள்ளே செல்ல முயன்றனர். அப்போது அவர்களுக்கும் கல்லூரி முதல்வர் இந்திரா, திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமிநாராயணன் மற்றும் பேராசிரியர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதுடன், ஒருவரையொருவர் நெட்டி தள்ளிக் கொண்டனர். இதையடுத்து கல்லூரி தரப்பினர் மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படும் என்றனர். இதனை ஏற்றுக் கொண்ட மாணவர்கள் தரப்பினர் போராட்டத்தை கைவிட்டனர்.

மாணவர் சேர்க்கை

அதன்பிறகு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இருந்த போதிலும் காலையிலேயே சேர்க்கைக்கு வந்திருந்த மாணவ, மாணவிகளிடம் கல்லூரி நிர்வாகத்தினர் சேர்க்கை முடிந்து விட்டதாக கூறியதன் பேரில், பலர் வீடுகளுக்கு சென்று விட்டனர். போராட்டத்திற்கு பிறகு சேர்க்கை நடைபெறுவதாக அறிந்து, மீண்டும் கல்லூரிக்கு வந்த பல மாணவர்களுக்கும் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. அரசின் விதிமுறைப்படி சேர்க்கை நடைபெறவில்லை எனக் கூறி மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இந்த சம்பவத்தால் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்