விடுதிகளில் தங்கி படிக்க மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் விடுதிகளில் தங்கி படிக்க மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளர்

Update: 2022-07-10 16:50 GMT

கள்ளக்குறிச்சி


கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

40 விடுதிகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளி மாணவர் விடுதிகள்-27, மாணவியர் விடுதிகள்-11, ஐ.டி.ஐ. விடுதி-1 மற்றும் ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதி-1 என மொத்தம் 40 விடுதிகளில் தங்கி படிக்க 2022-2023-ம் கல்வி ஆண்டுக்கான மாணவ-மாணவிகள் சேர்க்கை நடைபெறவுள்ளது.

அதன்படி பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் தாங்கள் சேர விரும்பும் விடுதியில் விண்ணப்பங்களை பெற்று அதை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது பெண் காப்பாளரிடம் வருகிற 20-ந் தேதி மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

இணையவழியில் பதிவேற்றம்

மேலும் இது தொடர்பாக விடுதி மேலாண்மை அமைப்பு (Hostel Management system) என்ற செயலியின் மூலம் இணையவழியில் மாணவர்கள் சேர்க்கையை நடத்திட https://tnadw.hms.in என்ற இணையதளத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் ஆதிதிராவிட நல பள்ளி விடுதி சேர்க்கை இணையவழியில் பதிவேற்றம் செய்திட தெரிவிக்கப்படுகிறது.

கல்லூரியில் படிக்கும் மாணவிகள் கள்ளக்குறிச்சி மாணவியர் விடுதியில் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து விடுதி பெண் காப்பாளரிடம் வருகிற 18-ந் தேதி முதல் அடுத்த மாதம்(ஆகஸ்ட்) 5-ந் தேதி வரை மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும். மாணவ-மாணவிகள் புகைப்படத்தை ஒட்டி கல்வி நிறுவன சான்றொப்பத்துடன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

ஆண்டு வருமானம்

விடுதிகளில் சேர்வதற்கு மாணவ-மாணவிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்குள் இருக்க வேண்டும். உணவு, உறைவிடம், 4 இணை சீருடைகளும் இலவசமாக வழங்கப்படும்.௧௦ மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டி புத்தகங்கள் வழங்கப்படும். 10-12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் விடுதிகளில் சேர்ந்து பயில அனுமதிக்கப்படுவர். மாணவர்கள் தங்களது இருப்பிடத்துக்கும் பள்ளிக்கும் இடைவெளி 5 கி.மீ. மேல் இருக்க வேண்டும். இவ்விதி மாணவிகளுக்கு பொருந்தாது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்