சென்னை ஐ.ஐ.டி.யில் மின்சார பந்தயகாரை உருவாக்கி மாணவர்கள் சாதனை
சென்னை ஐ.ஐ.டி.யில் முதல் முறையாக மின்சார பந்தயகாரை உருவாக்கி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
சென்னை ஐ.ஐ.டி.யின் பல்வேறு துறைகளை சேர்ந்த 45 மாணவர்களை கொண்ட 'ரப்தார்' என்ற பார்முலா கார் வடிவமைப்பு குழுவினர் மின்சாரத்தில் இயங்கும் பந்தயக்கார் ஒன்றை தயாரித்து சாதனை படைத்துள்ளனர். இந்த கார் சென்னை ஐ.ஐ.டி.யில் முதல் முறையாக மின்சாரத்தில் தயாரிக்கப்பட்டபந்தயகார் ஆகும்.
கடந்த ஓராண்டுகளாக மேற்கொண்ட முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள 'ஆர்.எப்.ஆர். 23' என்ற இந்த மின்சார பந்தயக்காரை சென்னை ஐ.ஐ.டி.யின் இயக்குனர் வி.காமகோடி நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ரப்தார் மாணவர் குழுவின் ஆலோசகர் பேராசிரியர் சத்தியநாராயணன் சேஷாத்திரி மற்றும் மின்சார பந்தயக்காரை உருவாக்கிய ரப்தார் மாணவர்கள் குழு தலைவர் கார்த்திக் கருமஞ்சி மற்றும் சக மாணவர்கள் உடன் இருந்தனர்.
இதுகுறித்து ஐ.ஐ.டி. இயக்குனர் வி.காமகோடி நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த கார் மின்சாரத்தில் இயங்குவதால் குறைந்த செலவில் அதிக அளவிலான வேகத்தில் மிகவும் சிறப்பாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது 4 வினாடிகளில் 100 கி.மீ. வேகத்தை எட்டும் அளவில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதன் அதிகபட்ச வேகம் என்பது மணிக்கு 150 முதல் 160 கிலோ மீட்டர் ஆகும். இந்த காரில் பேட்டரி பயன்படுத்தும் முறை மற்றும் தெர்மலை கையாளும் முறையானது மிகவும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் மிகவும் குறைந்த எடை உள்ள பேட்டரியில் அதிக செயல் திறன் கிடைக்கிறது. இந்த பந்தயக்காரில் பயன்படுத்தப்பட்டுள்ள பேட்டரியானது மிகவும் நேர்த்தியாக தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதால், இதே போன்ற முறையில் தயாரிக்கப்படும் பேட்டரிகளை சாதாரண மக்கள் பயன்பாட்டு காரில் பயன்படுத்தும்போது தீ விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கும்.
மேலும் இந்த கார் இரும்புக்கு பதில் 'கம்பாசிட்' என்ற மூலப்பொருளால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மின்சார பந்தய காரனது வருகிற ஜனவரி மாதம் கோவையில் நடைபெற உள்ள 'பார்முலா பாரத்' நிகழ்ச்சியிலும், ஆகஸ்டு மாதம் ஜெர்மனியில் நடைபெறும் 'பார்முலா ஸ்டுடண்ட் ஜெர்மனி' நிகழ்ச்சியிலும் பங்கேற்க உள்ளது. அடுத்தகட்டமாக டிரைவர் இல்லாமல் தானாக இயங்கும் கார் தயாரிக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரப்தார் மாணவர்கள் குழு தலைவர் கார்த்திக் கருமஞ்சி கூறும்போது, "இந்த பந்தயக்காரை உருவாக்க எங்களுக்கு ரூ.1 கோடிக்கு மேல் தேவைப்பட்டது. இதனை 20-க்கும் மேற்பட்ட ஸ்பான்சர்கள் வழங்கி உள்ளனர். இந்த காரை உருவாக்குவதற்கு கடந்த 2020-ம் ஆண்டு திட்டமிட்டோம். 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் காரை உருவாக்க தொடங்கினோம். நாங்கள் 45 பேரும், தினசரி பாட வகுப்புகள் முடிவடைந்தவுடன் மின்சார பந்தயக்காரை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்.
தினசரி 8 மணி நேரத்திற்கும் மேல் அதில் செலவிடுவோம். என்ஜினீயரிங் மாணவர்களுக்கு இடையே தேசிய, சர்வதேச அளவில் நடைபெறும் பல்வேறு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளோம். எனவே, கோவையில் நடைபெறும் பார்முலா கார் பந்தயத்திலும், ஜெர்மனியில் நடைபெறும் பந்தயத்திலும் நாங்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்று தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்ப்போம் என்று நம்புகிறோம்" என்றார்.