போதை பொருட்களை ஒழிக்காமல் மாணவர்கள், இளைஞர்களை காப்பாற்ற முடியாது -அன்புமணி ராமதாஸ் அறிக்கை

மாவா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்காமல் மாணவர்களையும், இளைஞர்களையும் காப்பாற்ற முடியாது என்றும், தமிழக அரசு நினைத்தால் ஒரே உத்தரவில் அனைத்து மதுக்கடைகளையும் மூட முடியும் என்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Update: 2023-09-06 20:51 GMT

சென்னை,

சென்னை திருவொற்றியூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், மாவா எனப்படும் போதைப் பாக்குகளை சாப்பிட்டு வகுப்பறையில் போதையில் உறங்கிய மாணவனை கண்டித்த ஆசிரியர், அந்த மாணவனால் கொடூரமாகத் தாக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

ஆசிரியர்கள் கொண்டாடப்பட வேண்டிய ஆசிரியர் நாளில் இப்படி ஒரு நிகழ்வு நடந்ததை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. தாக்குதலுக்கு உள்ளான ஆசிரியர் விரைவில் நலம் பெற்று இல்லம் திரும்ப எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாவா உள்ளிட்ட அனைத்து போதைப் பாக்குகளும் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அவை தாராளமாக கிடைப்பது தான் மாணவர்களும், இளைஞர் சமுதாயமும் சீரழிவதற்கு காரணமாகும். மாவா மற்றும் போதைப்பாக்கில் தொடங்கும் சீரழிவுப் பயணம் மது, கஞ்சா எனத் தொடருகிறது. வகுப்பறையில் ஆசிரியரைத் தாக்குவதில் தொடங்கும் குற்றச்செயல்கள், போலீஸ் அதிகாரியை தாக்கும் அளவுக்கு உச்சத்தை அடைகின்றன.

நடவடிக்கை

சமூகம் சீரழிவதற்கு சட்டப்படி விற்கப்படும் மது உள்ளிட்ட போதைப் பொருட்களும், சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் மாவா, குட்கா உள்ளிட்ட போதைப் பாக்குகளும் தான் காரணமாகும். இவற்றை ஒழிக்காமல் மாணவர்களையும், இளைஞர்களையும் காப்பாற்ற முடியாது.

தமிழக அரசு நினைத்தால் ஒரே ஆணையில் அனைத்து மதுக்கடைகளையும் மூட முடியும். சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் அனைத்து போதைப் பொருட்களையும் ஒரே நாளில் கட்டுப்படுத்த முடியும். ஆனால், அதற்கான நடவடிக்கைகளை அரசும், போலீசாரும் முழு வீச்சில் மேற்கொள்ளாதது ஏன்? என்பது தான் தெரியவில்லை.

இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சமுதாயத்தையும் காக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு இருப்பதால், அனைத்து வகையான போதைப் பொருட்களையும் முற்றிலுமாக ஒழித்து தமிழ்நாட்டை போதையில்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்