ரெயில் முன்பு தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவி; தந்தை மரணத்தில் திருப்பம்...!
மகள் கொலை செய்யப்பட்டதை அறிந்த தந்தை மாணிக்கம் மதுவில் விஷம் கலந்து குடித்து உள்ளார்.
சென்னை
சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்திற்கு தாம்பரத்தில் இருந்து மின்சார ரெயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.
அப்போது பிளாட்பாரத்தில் நின்று இளம் பெண்ணுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த இளைஞர் , சட்டென்று அந்தப்பெண்ணை பிடித்து ரெயில் முன்பு தள்ளினார்.
தண்டவாளத்தில் விழுந்த அடுத்த நொடியே அந்தப்பெண்ணின் தலை துண்டானது.
அங்கிருந்து இளைஞர் தப்பி ஓடிவிட்டார் உடனடியாக ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது விரைந்து வந்த போலீசார் அந்த இளம் பெண்ணின் துண்டான உடல் பாகங்களை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் காவலர் குடும்பத்திற்குள் ஏற்பட்ட காதல் விவகாரத்தில் இந்த கொலைச்சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது
சென்னையை அடுத்த ஆலந்தூர் ராஜா தெரு போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் மாணிக்கம் (வயது 47). இவரது மனைவி ராமலட்சுமி (43). மாணிக்கம் ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு ஏட்டாக பணியாற்றி வருகிறார்.
இவர்களது மகள் சத்தியப்பிரியா (20). இவர் தியாகராயநகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தினமும் மதியம் பரங்கிமலை ரெயில்நிலையத்துக்கு வந்து அங்கிருந்து மின்சார ரெயில் மூலம் தியாகராயநகர் செல்வது வழக்கம்.
சத்தியப்பிரியா வசித்து வரும் போலீஸ் குடியிருப்புக்கு எதிரே உள்ள வீட்டில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சதீஷ் (23). டிப்ளமோ படித்துள்ளார்.
சத்தியப்பிரியா, சதீஷ் ஆகியோரின் வீடு எதிரெதிரே என்பதாலும், இருவரும் போலீஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
இவர்களின் காதல் விவகாரம், சத்யாவின் பெற்றோருக்கு தெரிய வந்ததால் மகளை கடுமையாக கண்டித்துள்ளனர்.
இதனால் கடந்த ஒரு வருடமாக சதீஷிடம் சத்யா சரியாக பேசாமல் இருந்துள்ளார்.
சத்யா மீது கோபத்தில் இருந்த சதீஷ் மூன்று மாதங்களுக்கு முன் அவரது கல்லூரிக்கு சென்று நுழைவாயிலில் வைத்து சத்யாவை அடித்துள்ளார்.
சத்யாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்ட சதீஷை விசாரித்த போலீசார், இருவரது பெற்றோரும் காவல்துறையை சேர்ந்தவர்கள் என்பதால் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.
அதன்பின்னரும் சதீஷ் தெடர்ந்து சத்யாவிடம் பேச முயன்றுள்ளார் அவர் சமாதனம் அடையவில்லை என்று கூறப்படுகின்றது.
இறுதியாக வியாழக்கிழமை பரங்கிமலை ரெயில்நிலையத்தில் ரெயிலுக்காக காத்திருந்த தோழிகளுடன் மாணவி சத்யாவிடம் வலியச்சென்று வம்பிழுத்து சதீஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.
இருவருக்கும் வாக்குவதம் முற்றியதால் சத்யா இனி தனக்கு கிடைக்க மாட்டாள் என்ற நிலைக்கு வந்த சதீஷ், செத்து ஒழி என்று ஆவேசமாக கத்தியபடி. தாம்பரத்தில் இருந்து வேகமாக வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு சத்யாவை பிடித்து தள்ளி கொலை செய்ததாக உடன் இருந்த தோழிகள் கண்ணீர்மல்க தெரிவித்தனர்.
தப்பி ஓடிய சதீஷை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து ரெயில்வே போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் துரைப்பாக்கத்தில் பதுங்கி இருந்த சதீஷ் நள்ளிரவு 2 மணி அளவில் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஏற்கனவே தியாகராயநகர், செயின்ட் தாமஸ் மவுண்ட் உள்ளிட்ட காவல்நிலையங்களில் வழக்கு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையில் மகள் கொலை செய்யப்பட்டதை அறிந்த தந்தை மாணிக்கம் மதுவில் விஷம் கலந்து குடித்து உள்ளார். இதனை அடுத்து உறவினர்கள் அவரை உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாணிக்கம் உயிரிழந்தார். தற்போது அவரது உடல் ராஜிவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக மானீக்கத்திற்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்டது.