டிராக்டர் மோதி மாணவி படுகாயம்

நாகையில் விழிப்புணர்வு பிரசாரத்துக்கு சென்று விட்டு திரும்பிய மாணவி மீது அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டர் மோதியதால் படுகாயம் அடைந்தார்.;

Update:2022-07-10 00:18 IST

வெளிப்பாளையம்

நாகையில் விழிப்புணர்வு பிரசாரத்துக்கு சென்று விட்டு திரும்பிய மாணவி மீது அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டர் மோதியதால் படுகாயம் அடைந்தார்.


விழிப்புணர்வு பிரசாரம்

நாகை பகுதியில் மக்கும், மக்காத குப்பைகள் சேகரிப்பது குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நகராட்சி சார்பில் வீடு, வீடாக சென்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதற்காக நாகை காடம்பாடி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இருந்து சென்ற 15 மாணவிகள் நேற்று நாகை நெல்லுக்கடை தெருவில் விழிப்புணர்வு பிரசாரத்தை முடித்து விட்டு தங்களது வீடுகளுக்கு சென்று கொண்டிருந்தனர்.

டிராக்டர் மோதியது

அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த டிராக்டர் மாணவிகள் மீது மோதியது. இதில் நாகை புதிய நம்பியார் நகர் பகுதியை சேர்ந்த மதியழகன் மகள் தரீஷ்கா (வயது14) கால் முறிந்து படுகாயம் அடைந்தார். மற்ற மாணவிகள் காயமின்றி உயிர் தப்பினர்.டிராக்டரை அங்கேயே நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார்.இதுகுறித்து தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

தாசில்தார் விசாரணை

சம்பவ இடத்திற்கு நாகை தாசில்தார் அமுதா வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் செல்லூர் பகுதியைச் சேர்ந்த சரபோஜி என்பவருக்கு சொந்தமான டிராக்டரில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்ததும், இவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினராகவும் உள்ளதும் தெரிய வந்தது.இதுகுறித்து வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார், டிராக்டர் டிரைவர் நாகையை சேர்ந்த நீதிகண்ணன்(60) மற்றும் டிராக்டர் உரிமையாளர் சரபோஜி ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து டிரைவர் நீதிகண்ணனை கைது செய்தனர்.மேலும் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்