அவசர வழி கதவு உடைந்ததால் பள்ளி வேனில் இருந்து விழுந்த மாணவி படுகாயம்

தாம்பரம் அருகே வேகத்தடையில் ஏறி இறங்கியபோது அவசர வழி கதவு உடைந்ததால் பள்ளி வேனில் இருந்து தவறி விழுந்து மாணவி படுகாயம் அடைந்தார். பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-22 22:44 GMT

தாம்பரம்,

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் சாலையில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு சொந்தமான பஸ்கள் மற்றும் வேன்கள் மூலம் தினமும் பள்ளிக்கு மாணவர்களை அழைத்து வருவது வழக்கம்.

நேற்று காலை வழக்கம்போல் தாம்பரம் பகுதியில் இருந்து மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு வேன் வந்தது. அதில் மேற்கு தாம்பரம் பகுதியை சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் 11 வயது மாணவி ரியோனா உள்பட 31 பேர் பயணம் செய்தனர்.

மாணவி படுகாயம்

பள்ளியின் அருகே சென்றபோது, சாலையில் இருந்த வேகத்தடையில் வேன் ஏறி இறங்கியது. அப்போது பள்ளி வேனின் பின்புறம் பக்கவாட்டில் உள்ள அவசர வழி கதவு திடீரென உடைந்து விழுந்தது.

இதில் அவசர வழி கதவு அருகே இருக்கையில் அமர்ந்து வந்த மாணவி ரியோனா, வேனில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டார். இதில் மாணவி ரியோனா படுகாயம் அடைந்தார். அவருக்கு 4 பற்கள் உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த பொதுமக்கள், மாணவியை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

விபத்து நடந்தவுடன், பள்ளி வேனை சாலையிலேயே நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிய டிரைவர் வெங்கட்ராமனை, பொதுமக்கள் மடக்கிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பள்ளி ேவனை சரிவர பராமரிக்காததே இந்த விபத்துக்கு காரணம். மாணவர்களின் உயிரோடு விளையாடாமல் முறையாக பள்ளி பஸ், வேன்களை பராமரிக்க வேண்டும் என்று கூறி பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்துவந்த போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து கலைந்து போக செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்