தண்ணீரில் மூழ்கி மாணவன் பலி

தண்ணீரில் மூழ்கி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

Update: 2022-10-07 15:16 GMT

தொண்டி, 

திருவாடானை தாலுகா ஓரியூர் புதுவயல் கொள்ளைக்காடு பகுதியில் வசித்து வருபவர் மகேந்திரன் என்ற ஆசை. இவரது மனைவி ஜான்சிராணி. மகன் ஆகாஷ். அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை 3.30 மணி அளவில் ஜான்சி ராணி தனது மகன் ஆகாசை அழைத்துக் கொண்டு புதுவயல் அருகே உள்ள பாம்பாற்று பகுதியில் குளிக்க சென்றுள்ளார். பாம்பாற்றுக்குள் உள்ள ஒரு குட்டையில் குளித்துக்கொண்டிருந்தபோது ஆகாஷின் செருப்பு தண்ணீரில் மிதந்து நடு பகுதிக்கு சென்று விட்டது. செருப்பை எடுக்க ஆகாஷ் தண்ணீரில் நீந்தி சென்றுள்ளான். ஆனால் குட்டையின் நடுப்பகுதிக்கு சென்ற அவனால் திரும்பிவர முடியவில்லை. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து கத்தி கூச்சல் போட்ட அவனது தாயால் ஆகாசை காப்பாற்ற முடியவில்லை. பின்னர் அவர் ஊருக்கு சென்று உறவினர்களை அழைத்துக்கொண்டு சென்று பார்த்தபோது ஆகாஷ் மயங்கிய நிலையில் கிடந்துள்ளான். உடனே கிராமத்தினர் ஆகாசை மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் ஆகாஷ் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த எஸ்.பி. பட்டினம் போலீசார் ஆகாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக எஸ்.பி.பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்