வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்
பழனி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில், வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.
மனு கொடுக்கும் போராட்டம்
பழனி வாடகை வீட்டில் குடியிருப்போர் கூட்டமைப்பு சார்பில், வீட்டுமனை பட்டா கேட்டு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று பழனி பகுதியில் வாடகை வீட்டில் குடியிருப்போர் 500-க்கும் மேற்பட்டோர் பழனியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் திரண்டனர்.
பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் பொதுமக்கள், கட்சியினர் காந்திரோடு, புதுதாராபுரம் ரோடு வழியாக பழனி ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தனர்.
இதற்கிடையே ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பாதுகாப்பில் இருந்த போலீசார், குறிப்பிட்ட நபர்கள் மட்டும் அலுவலகத்துக்கு சென்று மனு அளிக்கும்படி அறிவுறுத்தினர்.
ஆர்.டி.ஓ. பேச்சுவார்த்தை
அதையடுத்து மதுக்கூர் ராமலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், நகர செயலாளர் கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜமாணிக்கம் மற்றும் பெண்கள் சிலர் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு சென்றனர். பின்னர் கோரிக்கை தொடர்பாக 1,000 மனுக்களை ஆர்.டி.ஓ.விடம் அளித்தனர்.
பின்னர் வாடகை வீட்டில் குடியிருக்கும் மக்கள் அனைவருக்கும் வீட்டுமனை பட்டா வழங்கி, வீடு கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதைத்தொடர்ந்து அலுவலக வளாகத்தில் திரண்டிருந்த பொதுமக்களிடம் ஆர்.டி.ஓ. சரவணன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பரபரப்பு
அப்போது, பழனி பகுதியில் வாடகை வீட்டில் குடியிருக்கும் மக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டி, அதில் குடியமர்த்த போதிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசுக்கு பரிந்துரை செய்வதாக தெரிவித்தார்.
இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். வீட்டுமனை பட்டா கேட்டு, ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் ஏராளமானோர் திரண்டதால் பழனியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.