மே மாதத்திற்கு பிறகு காலவரையற்ற போராட்டம்
மத்திய, மாநில அரசுகள் சுங்கச்சாவடி விவகாரத்தில் அக்கறை செலுத்தாவிட்டால் வரும் மே மாதத்திற்கு பிறகு காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா பேசினார்.
மத்திய, மாநில அரசுகள் சுங்கச்சாவடி விவகாரத்தில் அக்கறை செலுத்தாவிட்டால் வரும் மே மாதத்திற்கு பிறகு காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா பேசினார்.
ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி முன்பு கட்டண உயர்வை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். இதில் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா கலந்து கொண்டு பேசினார். இதில் லாரி உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா பேசியதாவது:-
நாடு முழுவதும் உள்ள சுமார் 750-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில், 400-க்கும் மேற்பட்டவை காலாவதி ஆகிவிட்டன. தமிழகத்தில் 32 சுங்கச்சாவடிகள் காலாவதி ஆகிவிட்டன. ஆனால் அவற்றிலும் சுங்க கட்டணம் வசூலிக்கிறார்கள். செலவின தொகை கிடைத்தவுடன் சாலை ஒப்பந்ததாரர்கள் அரசிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் ஒப்படைக்கவில்லை. நாங்கள் சுங்க கட்டணத்தை எதிர்க்கவில்லை சுங்கச்சாவடிகளை மட்டுமே எதிர்க்கிறோம்.
பகல் கொள்ளை
நாடு முழுவதும் சுமார் 1 கோடிக்கும் மேலான கனரக வாகனங்களில் 80 லட்சம் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் செல்கின்றன. அவற்றிக்கு ஆண்டுதோறும் தோராயமாக தலா ரூ.80 ஆயிரம் கட்ட நாங்கள் தயார். மத்திய அமைச்சர் டோல்கேட் வருமானமாக ரூ.64 ஆயிரம் கோடி கிடைப்பதாக கூறுகிறார். அதை நாங்கள் கட்டும் தொகையில் இருந்தே பெற முடியும். தேவையில்லாத சுங்கச்சாவடிகளையும் அகற்ற முடியும். செலவின குறைப்புடன், ஒரே தவணையில் அரசுக்கு கிடைக்கும் தொகைக்கான வட்டி உள்ளிட்டவைகளும் கிடைக்கும்.
அத்திப்பள்ளி சுங்கச்சாவடியில அப்பகுதி வாகன ஓட்டிகள் கட்டணங்கள் கட்டுவதில்லை. ஆனால் கிருஷ்ணகிரியில் பகல் கொள்ளை நடக்கிறது. இதை மக்கள் உணரவேண்டும். லாரி உரிமையாளர்கள் மட்டும் தான் ஒரு நாளைக்கு சுமார் ரூ.4 ஆயிரம் வரி கட்டுகிறார்கள். வேறு யாரும் இவ்வளவு பெரிய தொகை வரி கட்டுவதில்லை. ஆனால் லாரி உரிமையாளர்களுக்கு எந்த சலுகைகளும் இல்லை.
காலவரையற்ற போராட்டம்
எனவே நீட் தேர்வை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் இயற்றியதை போல், காலாவதியான, 32 சுங்கச்சாவடிகளையும் அகற்ற தீர்மானம் இயற்ற வேண்டும். மத்திய, மாநில அரசுகள் சுங்கச்சாவடி விவகாரத்தில் அக்கறை செலுத்தாவிட்டால் வரும் மே மாதத்திற்கு பிறகு காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.