செல்போன் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டம்

சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து உத்தனப்பள்ளியில் செல்போன் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்ட செல்லக்குமார் எம்.பி. உள்பட 250 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-01-18 18:45 GMT

ராயக்கோட்டை, ஜன.19-

சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து உத்தனப்பள்ளியில் செல்போன் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்ட செல்லக்குமார் எம்.பி. உள்பட 250 பேர் கைது செய்யப்பட்டனர்.

போராட்டம்

சூளகிரி தாலுகா ராயக்கோட்டை அருகே உள்ள உத்தனப்பள்ளி, அயர்னப்பள்ளி, நாகமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் சிப்காட் அமைக்க 3,500 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தனப்பள்ளியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை விவசாயிகள் 15 பேர் உத்தனப்பள்ளியில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

சாலை மறியல்

இதனிடையே செல்லக்குமார் எம்.பி. மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் முரளிதரன் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து உத்தனப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் மற்றும் ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா ஆகியோர் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட எம்.பி. மற்றும் விவசாயிகள் உள்பட 250 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்