சேலம் மாநகராட்சி வணிக வளாகத்தில் உள்ளபூ மார்க்கெட்டை மாற்றக்கோரி வியாபாரிகள் தர்ணா போராட்டம்
சேலம் மாநகராட்சி வணிக வளாகத்தில் உள்ள பூ மார்க்கெட்டை மாற்றக்கோரி வியாபாரிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
சேலம்
சேலம் மாநகராட்சி வணிக வளாகத்தில் உள்ள பூ மார்க்கெட்டை மாற்றக்கோரி வியாபாரிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்ணா போராட்டம்
சேலம் பழைய பஸ் நிலையத்தையொட்டி உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் தற்காலிகமாக பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இதனால் வணிக வளாகத்தில் உள்ள கடைகளில் வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று பூ மார்க்கெட்டை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி வியாபாரிகள் திடீரென அங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறும் போது, கடந்த ஜூலை மாதம் முதல் இங்கு பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் வியாபாரமும் பாதிக்கப்படுகிறது. எனவே பூ மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் 4 மாத வாடகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றனர்.
பேச்சுவார்த்தை
இதையடுத்து அவர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வியாபாரிகளிடம், விரைவில் பூ மார்க்கெட்டை இங்கிருந்து மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து வியாபாரிகள் கலைந்து சென்றனர். இதனிடையே பூ வியாபாரிகள் பலர் மாநகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் ஆணையாளர் பாலச்சந்தரை சந்தித்து பேசினர். அப்போது அவரிடம் வ.உ.சி. பூ மார்க்கெட் பராமரிப்பு பணியை விரைந்து முடித்து அங்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று ஆணையாளர் தெரிவித்தார்.