கிராமத்தின் வழியாக கொண்டு செல்ல எதிர்ப்பு:இறந்தவரின் உடலுடன் பொதுமக்கள் போராட்டம்

Update: 2023-08-30 19:45 GMT

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே இருளர் இனத்தை சேர்ந்தவரின் உடலை, கிராமத்தின் வழியாக கொண்டு செல்ல ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் உடலுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இறப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், பெரியமுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்டது பால்சுனை கிராமம். இந்த கிராமத்தில் இருளர் இனத்தை சேர்ந்த, 100-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த கிராம மக்களுக்கான சுடுகாடு புழுக்கான்கொட்டாய் கிராமத்திற்கு அருகே உள்ளது. இந்த நிலையில் பால்சுனையை சேர்ந்த வேலு என்பவர், உடல் நலம் பாதிப்படைந்த நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இறந்தார்.

இதையடுத்து அவரது உடலை பால்சுனை கிராமத்திற்கு கொண்டு வந்த உறவினர்கள், இறுதி சடங்குக்காக புழுக்கான்கொட்டாய் வழியாக சுடுகாட்டிற்கு எடுத்து செல்ல முயன்றனர். அப்போது அப்பகுதி மக்கள் சிலர் விபத்து மற்றும் வெளியூர் மருத்துவமனைகளில் இறந்தவர்களை எங்கள் ஊர் வழியாக எடுத்து செல்லக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தை

இதையடுத்து வேலுவின் உடலை பொதுமக்கள் கிருஷ்ணகிரியில் திருவண்ணாமலை சாலையில் உள்ள மின் மயானத்திற்கு எடுத்து வந்த நிலையில் அங்கு வேலுவின் உடலுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி மற்றும் தாசில்தார் சம்பத் ஆகியோர் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இனிவரும் காலங்களில் விபத்து, வெளியூரில் இறந்தவர்களுக்கு தனி இடம் ஒதுக்கி தரப்படும். அங்கு இறந்தவர்களுக்கு சடங்குகள் நடத்தலாம் என கூறினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்