மேச்சேரி அருகேதே.மு.தி.க. கொடிக்கம்பம் அமைக்க எதிர்ப்புமின்சார கம்பத்தில் ஏறி போராட்டம் நடத்தியவரால் பரபரப்பு

Update: 2023-08-22 20:13 GMT

மேச்சேரி

மேச்சேரி அருகே தே.மு.தி.க. கொடிக்கம்பம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மின்சார கம்பத்தில் ஏறி போராட்டம் நடத்தியவரால் பரபரப்பு ஏற்பட்டது.

தே.மு.தி.க. கொடிக்கம்பம்

மேச்சேரி அருகே செங்காட்டூர் பிரிவு ரோடு அருகே  நகர தே.மு.தி.க. சார்பில் சாலை ஓரத்தில் கொடிக்கம்பம் அமைப்பதற்கு நேற்று காலை 10 மணி அளவில் கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் தங்கம், மாதேஷ், நகர செயலாளர் பழனிசாமி மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.

கொடிக்கம்பம் அமைத்து கொடி ஏற்றுவதற்கான ஆயத்த பணியை தொடங்கிய போது அந்த இடத்தின் அருகில் வசிக்கும் கலையரசன் குடும்பத்தினர் இந்த இடத்தில் கொடிக்கம்பம் அமைத்து கொடியேற்றக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கலையரசன் குடும்பத்தை சேர்ந்த 2 பெண்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து சேலம் மேற்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் சுரேஷ்பாபு, மாநில மகளிர் அணி செயலாளர் மாலதி உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர்.

எதிர்ப்பு

மேலும் கலையரசன் குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் அங்கு வந்தனர். அவர்கள் கொடிக்கம்பம் ஏற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொடிக்கம்பம் அமைக்கும் இடத்தில் அமர்ந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். தே.மு.தி.க. கம்பத்தை அமைப்பதற்கு கட்சியினர் முற்பட்டனர்.

அப்போது அப்பகுதியைச் சேர்ந்த வேலு என்பவர் மேச்சேரி-ஓமலூர் சாலையில் உள்ள சோலார் மின் கம்பத்தில் ஏறி இந்த பகுதியில் கம்பம் அமைத்துக் கொடியேற்றக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். மேச்சேரி போலீசார் வேலுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேலுவை கம்பத்தில் இருந்து இறக்கினர். மேலும் மேச்சேரி போலீசார் தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது வருவாய்த்துறையினரிடம் பேசி கொடிக்கம்பம் அமைத்து கொடி ஏற்றுவதற்கான இடத்தை தேர்வு செய்து தருவதாக போலீசார் கூறினர். இதையடுத்து கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று காலையில் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்