பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கை -அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கை அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

Update: 2022-06-19 18:59 GMT

சென்னை,

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த ஆண்டின் முதல் 4 மாதங்களுடன் ஒப்பிடும்போது, நடப்பாண்டின் முதல் 4 மாதங்களில் அதிகரித்திருப்பதாக போலீஸ் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் இத்தகைய குற்றச்சாட்டுகள் அதிகரித்துவருவதை பொறுப்புள்ள குடிமக்களால் ஏற்கவே முடியாது. பெண்களின் பாதுகாப்பு குறித்த குரல்கள் தொடர்ந்து வலுத்துவரும் நிலையில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதும், குற்றங்கள் பெருகுவதும் கவலையளிக்கிறது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்தவேண்டும் என்றால் அதற்கான சூழல் அமைப்பை சீரமைக்கவேண்டும். தமிழ்நாடு முழுவதும் தடையின்றி மது கிடைப்பதை தடுக்க மதுக்கடைகளை மூடவேண்டும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவிகளை பின்தொடர்ந்து சென்றும், கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் வழியில் குழுவாக கூடியிருந்தும் கிண்டல் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது, மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பை வலுப்படுத்துவது, மகளிருக்கான சிறப்பு பஸ்களின் எண்ணிக்கையை கிராமப்புறங்கள் வரை அதிகரிப்பது, பாலியல் சீண்டல் ஆபத்துகள் குறித்து குழந்தைகள், சிறுமிகளுக்கு விழிப்புணர்வூட்டுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை தமிழக அரசும், போலீசும் மேற்கொள்ளவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்