அரசு பேருந்து ஓட்டுநர்கள் குடித்துவிட்டு வந்தால் கடும் நடவடிக்கை - நிர்வாக இயக்குனர் எச்சரிக்கை

குடித்துவிட்டு வேலைக்கு வரும் அரசு பேருந்து ஓட்டுநர்கள் மீது பணிநீக்கம் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-10-28 17:13 GMT

சென்னை,

சென்னையில் அரசுப் பேருந்து ஊழியர்கள் குடித்துவிட்டு பணிசெய்வதாக பல இடங்களில் புகார்கள் எழுந்தன. இதுகுறித்து மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் நிர்வாக இயக்குனர், அண்மையில் அனைத்து கிளைகளின் மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார்.

குடித்துவிட்டு பணிக்கு வரும் ஊழியர்களால் பயணிகளிடையே கெட்டப் பெயரை ஏற்படுத்துவதுடன், அரசு பேருந்துகளை மக்கள் தவிர்க்கும் வாய்ப்பு உள்ளது என்றும், பணியின் போது குடித்திருப்பது கண்டறியப்பட்டால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது என்றும், பணிநீக்கம் உள்ளிட்ட மிகக் கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் நிர்வாக இயக்குனர் எச்சரித்துள்ளார்.

அதே போல் போக்குவரத்துக் கழக பணிமனைகளிலும் ஓட்டுநர்கள், மெக்கானிக்குகள், பிற பணியாளர்களுக்கு 26 குறிப்புகள் கொண்ட வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பணியின் போது மது அருந்திவிட்டு வந்தாலோ, புகைப் பிடித்தாலோ அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிமனைக்கு உள்ளே 5 கி.மீ. வேகத்தில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்றும், பணியில் இருக்கும் போது செல்போன் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பணிமனைக்குள் பேருந்து செல்லும்போது ஓட்டுநர், நடத்துனர், பாதுகாவலர் மூவரும் பேருந்தில் தீப்பற்றக் கூடிய பொருட்களோ, வெடிப்பொருட்களோ இருந்தால் அவற்றை காவல்துறை உதவியுடன் அகற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்