விதிமுறைகளை மீறி செயல்படும் பள்ளி வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை

விதிமுறைகளை மீறி செயல்படும் பள்ளி வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.;

Update:2022-06-17 14:02 IST

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக மைதானத்தில் நேற்று திருவள்ளூர், திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டு வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பள்ளி வாகனங்கள் சிறப்பு ஆய்வு முகாம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆய்வுக்காக கொண்டுவந்து நிறுத்தப்பட்டிருந்த பள்ளி வாகனங்களில் ஏறி மாணவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து அதன் விவரங்களை அங்கு இருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் அனைத்து பள்ளி வாகனங்களையும் ஒருங்கிணைத்து சிறப்பு குழு மூலம் ஆய்வு செய்து அனைத்து பள்ளி வாகனமும் 16 சரத்துகளுக்கு உட்பட்டு சரியான நிலையில் உள்ளதா அல்லது ஏதேனும் குறைகள் உள்ளதா அந்த குறைகள் இருந்தால் அது சீர் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்வது வழக்கம்.

அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து பள்ளிகளில் இருந்தும் திருவள்ளூர் தலைமையிடத்திற்கு வந்து பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி கடந்த ஆண்டுகளில் நடைபெற்று வந்தது. அனைத்து பள்ளி வாகனங்களும் பல்வேறு இடங்களில் இருந்து ஆய்வுக்காக திருவள்ளூர் மாவட்ட தலைமை இடத்திற்கு வந்து செல்வது சிரமமான சூழ்நிலை என்பதை கண்டறிந்து, அந்தந்த வருவாய் கோட்டத்திலேயே, அந்தந்த வருவாய் ஆர.டி.ஓ. தலைமையில் ஆய்வு செய்யலாம் என முடிவு எடுக்கப்பட்டது.

இந்த ஆய்வின் அடிப்படையில் திருவள்ளூர் வருவாய் மண்டலத்திற்கு உட்பட்ட பள்ளி வாகனங்கள் ஆய்வு தற்போது நடைபெற்றது. இந்த ஆய்வு பள்ளி வாகனங்களுக்கு மட்டுமே நடக்கக்கூடிய ஒரு ஆய்வு ஆகும். இந்த ஆய்வின் அடிப்படையில் இந்த குழு பரிந்துரை செய்வதன் அடிப்படையிலேயேதான் பள்ளி வாகனங்கள் இயங்க முடியும்.

இந்த ஆய்வில் அரசு பரிந்துரைக்கும் வகையில் பஸ்கள் அமைக்கப்பட்டுள்ளதா, அவசர வழி அமைக்கப்பட்டுள்ளதா, தீயணைப்பு கருவி உள்ளதா, முதலுதவி பெட்டி உள்ளதா, வேக கட்டுப்பாட்டு கருவி சரியாக இயங்குகிறதா என்பது உள்ளிட்ட 16 வகையான வழிகாட்டு நெறிமுறைகளும் முறையாக சரியான முறையில் இயங்குகிறதா என்பதை உறுதி செய்த பிறகு வாகனங்கள் இயங்க அனுமதிக்கப்படுகிறது. அரசின் விதிமுறைகளை மீறி செயல்படும் பள்ளி வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது ஒரு பள்ளி வாகனத்தின் அடியில் 6 அடி நீளமுள்ள சாரை பாம்பு புகுந்தது. இதை பார்த்த அங்கு திரண்டு இருந்த டிரைவர்கள் திருவள்ளூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தீயணைப்புத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அரை மணி நேரத்துக்கும் மேலாக போராடி பாம்பை பிடிக்க முயன்றனர்.

பாம்பு ஒரு இடத்தில் சென்று பதுங்கி கொண்டது. அதை தொடர்ந்து டிரைவர் பஸ்சை முன்னும் பின்னுமாக இயக்கினார். அப்போது அந்த பாம்பு என்ஜினில் சிக்கி துண்டாகி விழுந்தது. இதை பார்த்த தீயணைப்புத்துறை அதிகாரிகள் அந்த பாம்பை எடுத்து அருகில் உள்ள புதரில் வீசி விட்டு சென்றனர்.

அதைத்தொடர்ந்து கலெக்டர் பள்ளி வாகனங்களின் டிரைவர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகளை முறையாக கடைபிடிப்பது குறித்து ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கி வாகனங்களை இயக்கும் டிரைவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கையேடுகளை வழங்கினார்.

தொடர்ந்து வாகனங்களை இயக்கும் டிரைவர்களுக்கு அமைக்கப்பட்ட சிறப்பு கண் மருத்துவ முகாமை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பசீபாஸ் கல்யாண், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜேசுராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன், திருவள்ளூர் ஆர்.டி.ஓ ரமேஷ், திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் மோகன், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் வீரராகவன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பன்னீர்செல்வம், மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சென்னை செங்குன்றம் போக்குவரத்து அலுவலர் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளான மீஞ்சூர், பொன்னேரி, சோழவரம் போன்ற இடங்களில் 34 பள்ளிகளில் மாணவர்களை ஏற்றிக்கொண்டு செல்வதற்காக 400 வாகனங்கள் செயல்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் 34 பள்ளி வாகனங்கள் நேற்று பஞ்செட்டி தனியார் கல்வி நிறுவன மைதானத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

இந்த பள்ளி வாகனங்களை பொன்னேரி ஆர்.டி.ஓ. காயத்ரி, செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலர் இளமுருகன், மோட்டார் வாகன ஆய்வாளர் கருப்பையன், ராஜராஜேஸ்வரி, பொன்னேரி கல்வி மாவட்ட அலுவலர் மோகன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

திருத்தணி அருகே தனியார் பள்ளி மைதானத்தில் வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நேற்று நடந்தது. இந்த ஆய்வில் முதல் கட்டமாக தனியார் பள்ளிகளில் உள்ள பஸ்கள், வேன்கள் என மொத்தம் 78 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வு பணியில் திருத்தணி ஆர்.டி.ஒ. சத்யா, மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரணீத் ஆகியோர் மேற்பார்வை செய்தனர்.

இதைத்தொடர்ந்து டிரைவர்களுக்கு தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது. திருத்தணி தீயணைப்பு நிலைய அலுவலர் அரசு தலைமையில் வீரர்கள் தீத்தடுப்பு முறைகள் குறித்து ஒத்திகை நடத்தி விளக்கம் அளித்தனர். வரும் திங்கட்கிழமை 2-வது கட்டமாக வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி நடைபெறும் என மோட்டார் வாகன ஆய்வாளர் லீலாவதி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்